காதலுக்காக மதம் மாறி கொண்டவன் கைவிட மாட்டான் என்றெல்லாம் வசனம் பேசிக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களுக்கு ஒரு பாடமாகத் திகழ்கிறது அன்வர்ராஜா எம்பி.,யின் மகன் நாசர் அலி விவகாரம் என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் சூடு பிடித்துள்ளது.
அன்வர்ராஜா எம்.பி மகன் நாசர் அலி விவகாரத்தில் தமிழக அரசு மெத்தன போக்கை கடைபிடிக்காமல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பெண்ணுரிமை நிலைநாட்ட படவேண்டும் .சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டம் தன் கடமையை செய்ய தமிழக முதல்வர் நாசர் அலியை கைது செய்ய வேண்டும் என மதங்களை கடந்து மனித நேயத்துடன் கேட்டுக் கொள்கிறோம்… – என்று கோரிக்கைகளும் கூக்குரல்களும் எழத்தொடங்கியிருக்கின்றன.
அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியின் திருமணம் காரைக்குடியில் நடக்க திட்டமிடப் பட்டிருந்தது. இந்த நிலையில் மணமகன் நாசர் மீது ரேடியோ ஜாக்கி பிரபல்லா சுபாஷ் என்ற பெண், தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் தெரிவித்தார் இதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மடிப்பாக்கம் ராம்நகரைச் சேர்ந்தவர் பிரபல்லா சுபாஷ். இவர் ரொபினா என்று பின்னர் பெயர் மாற்றிக் கொண்டார். இவர், சென்னை காவல்துறை ஆணையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அதில், “நான் வானொலியில் தொகுப்பாளராகப் பணியாற்றுகிறேன். 2015-ம் ஆண்டு சிறந்த தொழில் முனைவோராகத் தேர்வு செய்யப்பட்டு எனக்கு பரிசு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் அன்வர்ராஜா எம்.பி-யின் மகன் நாசர்அலி எனக்கு அறிமுகமானார்.
அதன் பிறகு, சைதாப்பேட்டையில் உள்ள என்னுடைய அலுவலகத்துக்கு அடிக்கடி நாசர் அலி வருவார். என்னிடம் அவர் அன்பாகப் பேசினார். தான் ஏற்கெனவே ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றி திருமணம் செய்துகொண்டதாக என்னிடம் தெரிவித்தார். திருமண வாழ்க்கைக்குப் பிறகு மன நிம்மதியில்லை என்று என்னிடம் தெரிவித்தார். அப்போது, எனக்கும் திருமணமாகி கணவர் இறந்துவிட்டதால் தனிமையில் வாழ்வதாக அவரிடம் தெரிவித்தேன்.
இதனால் நாங்கள் இருவரும் மனதளவில் ஒன்றானோம். அதன் பிறகு, எனது அலுவலகத்திலேயே அவர் தங்கினார். என்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். இதனால் கணவன் மனைவி போல வாழ்ந்தோம். நான் இந்து என்பதால் என்னை மதம் மாறும்படி தெரிவித்தார். இதை ஏற்று நானும் மதம் மாறினேன்.
அதன்பிறகு, வடபழனியில் உள்ள வீட்டில் வசித்தோம். பிறகு, சைதாப்பேட்டைக்கு குடிபெயர்ந்தோம். சைதாப்பேட்டை முகவரி மூலம் அவர் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆதார் அட்டையைப் பெற்றார்.
இந்த நிலையில் தொழில் தொடங்க என்னிடம் பணம் கேட்டார். அவர் மீதுள்ள அன்பால் நகைகளை அடகு வைத்து, கையிலிருந்த ரொக்கப் பணம் என 30 லட்சம் ரூபாய் வரை கொடுத்தேன். மேலும் பணம் தேவைப்பட்டதால் கடன் வாங்கி 20 லட்சம் ரூபாய் வரை அளித்தேன். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக நாசர்அலியின் நடவடிக்கைகள் மாறின. இதனால் என்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினேன். அதன் பிறகு அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்தினார். இதையடுத்து அன்வர்ராஜா எம்.பி.,யிடம் முறையிட்டேன். அப்போது அவர் விரைவில் திருமணம் செய்து வைப்பதாக உறுதி கூறினார்.
ஆனால், திருமணம் செய்து வைக்காமல் ‘நாசர்அலியை இனி நீ தொந்தரவு செய்தால் உயிருடன் இருக்க மாட்டாய். நான் யார் என்பது உனக்குத் தெரியும்’ என்று அன்வர் ராஜா தரப்பினர் மிரட்டினர். வரும் 25-ம் தேதி நாசர் அலிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடப்பதாக எனக்குத் தகவல் வந்துள்ளது. என்னை ஏமாற்றிய நாசர் அலி மற்றும் மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அன்வர் ராஜா எம்.பி. பதிலளித்த போது, “என் மகனும் அந்தப் பெண்ணும் சினிமா துறையில் இருந்ததால் நண்பர்களாகப் பழகினார்கள். அந்தப் பெண், என்னைக் கூட மிரட்டியிருக்கிறார். என்னுடைய மகனிடம் பணம் கொடுத்ததாகப் புகாரில் கூறியிருக்கிறார். அதற்காக ஆதாரம் இருந்தால் காவல்துறையினர் எங்களிடம் விசாரிக்கட்டும். அந்தப் பெண்ணிடம் 50,000 ரூபாய்கூட கிடையாது. அவர் எப்படி 50 லட்சம் கொடுத்திருப்பார்” என்றார்.
அன்வர் ராஜாவின் கேள்விக்கு பதிலளித்த பிரபல்லா சுபாஷ், ” எனது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கே மாதம் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பளம் தருகிறேன். ஆனால் என்னிடம் 50 ஆயிரம்கூட கிடையாது என அன்வர்ராஜா கூறுகிறார். நான் பணம் கொடுத்தது உண்மை” என்றார்.
இந்த நிலையில், அவர் வீடியோ பதிவு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “நாசர் அலி ஏற்கெனவே பெண்களை ஏமாற்றி பணம் பறித்திருக்கிறார். என்னையும் ஏமாற்றியிருக்கிறார். அவருக்காக மதம் மாறினேன். ஆனால் ஜமாத்தில் என் கோரிக்கையை ஏற்க மறுக்கிறார்கள்” என்று புகார் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் இன்று காரைக்குடியில் குறிப்பிட்ட ஜமாத்தாரிடம் அழுது புலம்பி கதறி கண்ணீர்விட்டு சுவரில் முட்டி மோதி பள்ளிவாசலில் அமர்ந்து போராடினார். அவரது நிலை கண்டு மனம் இரங்கிய ஜமாத்தார், இன்று நடைபெறவிருந்த நாசரின் திருமணத்தை நிறுத்திவிட்டனர். மேலும் காரைக்குடியில் எந்த ஜமாத்திலும் நாசருக்கு திருமணம் நடத்த மாட்டோம் என்று கூறினர். அது குறித்த செய்தி… அன்வர் ராஜா மகன் திருமணம்: அழுது தீர்த்த அபலைப் பெண்ணால் ஜமாத் நிறுத்தி வைப்பு!
அந்தப் பெண் வெளியிட்ட வீடியோ..!