சேலம் : மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து சுணங்கிக் கிடக்கும் மாநிலத்தை நிமிரச் செய்ய வேண்டும். இதனை தனது பேச்சில் சுட்டிக் காட்டியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!
சேலத்தில் இன்று நடைபெற்ற விமான சேவை தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுடன் நாங்கள் இணக்கமாக இருப்பதால்தான் தமிழக அரசு கேட்பதைச் செய்து தர பிரதமர் மோடி தயாராக இருக்கிறார் என்று கூறினார்.
சொல்லப் போனால், கடந்த 60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் மக்கள் ஏங்கித் தவித்ததும் அதற்காகத்தான். வெறுமனே வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று வசனம் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் எல்லா திட்டங்களும் தமிழகத்துக்கு வந்துவிடுமா? இந்நிலையில் முதல்வரின் பேச்சு சூழல் சார்ந்த உண்மைகளைப் புட்டுப் புட்டு வைத்தது.
நகரங்களை இணைக்கவும், தொழில் வளர்சிக்கு உதவும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் இன்று சேலம் விமான நிலையத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கப் பட்டது.
இந்தத் திட்டத்தை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் தமிழகத்திற்கு பல்வேறு நலன்களை நிச்சயம் செயல்படுத்தும். இதன் மூலம் ஏழை எளிய மக்களும் விமான சேவையைப் பயன்படுத்த முடியும். தமிழகத்தில் விமான சேவைக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சேலத்திற்கு அடுத்தபடியாக நெய்வேலியில் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தூத்துக்குடி, திருச்சி, சென்னை விமான நிலையங்களும் விரிவாக்கம் செய்யப்படுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் சேலம் சென்னை இடையே பசுமை வழிச்சாலை செயல்படுத்தப் படவுள்ளது. மாநில அரசுகள் மத்திய அரசோடு இணைந்து பணியாற்றினால் தான் மக்களுக்குத் தேவையான திட்டங்களை எளிதில் செயல்படுத்த முடியும்.
அந்த வகையில், தமிழகம் இணக்கமாக இருப்பதால்தான் எதைக் கேட்டாலும் அதை நிறைவேற்றித் தர பிரதமர் மோடி தயாராக இருக்கிறார்.
இப்படி தனது உரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுப் பேசினார்.