சென்னை: பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து அரசு அழைத்துச் சென்ற 282 பேரையும் அதே இல்லத்தில் திரும்ப ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.
பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து அரசு அழைத்துச் சென்ற 294 முதியவர்களில், உயிரோடு உள்ள 282 பேரை மீண்டும் கருணை இல்லத்தில் இன்றே ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட முதியோர்களை மீட்டுத்தரக் கோரி, காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்ல நிர்வாகி தாமஸ் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாமல், தங்களுக்கும் தகவல் தெரிவிக்காமல் முதியோர்களை அழைத்துச் சென்று விட்டதாகவும் முறையிட்டிருந்தார். கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட 294 பேரில், 12 பேர் இறந்துவிட்டதாகவும், மற்றவர்கள் பல்வேறு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து, கருணை இல்லத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்கள் அனைவரையும் இன்றே அந்த இல்லத்துக்கு திருப்பி அனுப்புமாறு வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் சி.டி.செல்வம், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில், மாவட்ட சமூக நல அதிகாரி நாளை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.