சென்னை: ஜெயலலிதா மரண விவகாரத்தில் விசாரணைக்காக அமைக்கபட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி ஆணையத்தில், அரசு மருத்துவர்களிடம் சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்னர் விசாரணை ஆணையத்தில் ஆஜரான ஏழு அரசு மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு இன்று குறுக்கு விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் ஏற்கெனவே அனுமதி அளித்திருந்தது. இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை சுட்டிக் காட்டி, இந்தக் குறுக்கு விசாரணை மேற்கொள்ள சசிகலா தரப்பு விசாரணை ஆணையத்தில் கால அவகாசம் கோரியது.
ஆனால், அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி குறைந்தது இரண்டு மருத்துவர் களையாவது இன்று விசாரணை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதன்படி இன்று சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயண பாபு, முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்து வருகின்றனர்.