தமிழகத்தையும் கேரளத்தையும் ரயில் பாதையின் வழியாக இணைக்கும் மூன்று முக்கிய பாதைகளில் ஒன்று கொல்லம் – செங்கோட்டை பாதை. நாகர்கோவில், கோயமுத்தூர் என மற்ற இரண்டு முக்கியமான ரயில் பாதைகளுக்கு இல்லாத சிறப்பு, செங்கோட்டை – கொல்லம் ரயில் பாதையில் உண்டு. அது, இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலாப் பாதை என்பதுதான்! மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், குகைகளையும் உயரமான மலை முகடுகளையும் கடந்து அமைக்கப்பட்ட பாரம்பரியமான ரயில் பாதை இது.
கொல்லம், கொச்சின், தூத்துக்குடி துறைமுகங்களை இணைக்கும் மிக முக்கியமான வர்த்தகப் பாதையாகவும் திகழ்கிறது. 1956 வரை கேரளத்தின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது செங்கோட்டை தாலுகா. மலைப் பாதையில் பயணித்து, மலை அடிவாரமான சமதளப் பகுதியில் இறங்கியதும் முதல் நகரம் செங்கோட்டை. அதனால் இங்கே ரயில் நிலையம், பிரிட்டிஷார் காலத்தில் மிகப் பெரிதாக அமைக்கப்பட்டது. இஞ்சின் மாற்றுவது, தண்ணீர் நிரப்புவது, ஓய்வு எடுப்பது, லோகோ பணிகள், ஷெட், கோளாறுகளை சரிசெய்யும் பணிமனை என்று ரயில் நிலையமும் பெரிதாக அமைக்கப்பட்டது. 1956ல் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போது, செங்கோட்டை பகுதி தமிழகத்தின் நெல்லை மாவட்டத்துடன் இணைந்தது.
செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் புனலூர் வரை 49.5 கி.மீ., ரயில் வழித்தடம், ஆரியங்காவு குகைப்பாதை ஆகியவை 1873ல் துவங்கப்பட்டது. 1902ல் சரக்கு ரயில்களும், 1904 முதல் பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டன. தொடர்ந்து, தமிழகம், கேரளம் இரு மாநிலங்களின் போக்குவரத்து, பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இந்தப் பாதை இருந்தது. இங்கிருந்து கொல்லம் மெயில், நாகூர் எக்ஸ்பிரஸ், நெல்லை, சென்னை, மதுரை ஆகிய நகரங்களுக்கு ரயில்கள் என இரு மாநில மக்களுக்கும் இணைப்புப் பாதையாக இருந்தது.
இதை அகலப் பாதையாக்கும் பணிகள், ரூ.358 கோடி மதிப்பீட்ட்டில் 2010 செப்.20ல் துவங்கப் பட்டன. மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப் பட்டு பணிகள் நடந்தன. இந்தப் பாதையில் ஆரியங்காவு கடந்து தென்மலை பகுதியில் புகழ்பெற்ற 13 கண் பாலம் உள்ளது. அதை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் பாரம்பரிய சின்னமாக கருதப்படும் அதை இடிக்க மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், பழைய பாலத்தின் தன்மை மாறாமல் பலப்படுத்தப்பட்டு அகலப் பாதை அமைக்கப்பட்டது. நிதி ஒதுக்கீடு தாமதம், பால பிரச்னை போன்றவற்றால் கடும் இழுபறி ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பணிகள் முடிந்துள்ளன.
இதை அடுத்து, இயற்கை எழில் மிக்க பாதையான ஆரியங்காவு குகை வழியாக எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று ரயில் இயக்கப்பட்டது. இதை உற்சாகமாகக் கொண்டாடினர் கேரள மக்கள். இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து கொல்லம் வருவது அறிந்து, தமிழக கேரள எல்லையான செங்கோட்டை ரயில் நிலையத்துக்கு அதிகாலையிலேயே கேரளத்தில் இருந்து வந்தனர். காலை 5.50க்கு செங்கோட்டை வந்த ரயிலுக்கு பெரிய அளவில் வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, கொல்லம் காங்கிரஸ் எம்.பி., கொடிக்குன்னில் சுரேஷ், ஆர்.எஸ்.பி., கட்சி எம்.பி., என்.கே.பிரேமசந்திரன், கேரள ரயில் பயணிகள் சங்கத்தினர் பலர் திரண்டு வந்து, செங்கோட்டை ரயில் நிலையத்தில் வரவேற்பளித்தனர். எட்டு ஆண்டுகளுக்குப் பின் தங்கள் மாநிலத்துக்குள் நுழையும் முதல் ரயிலில், பயணிகளுடன் சேர்ந்து எம்.பி.க்களும் அதே ரயிலில் சாதாரண பெட்டியில் பயணித்தனர்.
தொடர்ந்து இந்த ரயிலுக்கு ஆரியங்காவு, கல்துருத்தி, எடமண், தென்மலை, புனலுார் என அனைத்து ரயில் நிலையங்களிலும் கட்சி வேறுபாடின்றி மேள தாளம் முழங்கி இனிப்பு வழங்கி வரவேற்றனர். இது குறித்து பிரேமசந்திரன் குறிப்பிடுகையில், ”கொல்லத்தில் இருந்து நாகூர், ராமேஸ்வரம், தூத்துக்குடிக்கு ரயில்களை இயக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்” எனக் கூறினார்.
இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் நடந்தும், தமிழக பகுதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் இதனைக் கண்டுகொள்ளவே இல்லை. தமிழகம் ரயில்வே துறையில் புறக்கணிக்கப் படுகிறது; கேரளத்துக்குதான் சலுகைகள் செல்கின்றன என்று கொடி பிடித்து கோஷம் போட்டு, ஆர்ப்பாட்டங்களை நடத்தி அரசியல் மட்டுமே செய்யத் தெரிந்த தமிழக உறுப்பினர்களுக்கு இந்த ஆர்வம் கூட இல்லாமல் போனது துரதிர்ஷ்டம்.
நடப்பு நிதியாண்டுக்குள் இந்த ரயிலை இயக்க வேண்டும் என்பற்காக வெள்ளிக்கிழமை தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அங்கும் கூட தமிழக எம்.பிக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. தென் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ரயில் விடப்பட்டுள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எம்.பி.,க்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், நெல்லை பிரபாகரன், தென்காசி வசந்தி என எவருமே ரயிலை வரவேற்க வரவில்லை. ”தங்களின் சாதனை என கூறிக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பையும் பாஜக., கோட்டை விட்டுவிட்டது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வராவிட்டால் என்ன… நாங்கள் வரவேற்கிறோம் என்று, கொல்லத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலை செங்கோட்டையில் வரவேற்றனர் செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தினர் மற்றும் செங்கோட்டை வர்த்தக சங்கத்தினர். ரயில் ஓட்டுநர்களுக்கும், சிறப்பு ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கும் வர்த்தக சங்க நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் குகைகள், மலைப்பாதைகள், அடர்ந்த வனப் பகுதியின் வழியாக இந்த ரயில் செல்லும் போது வழியெங்கும் இயற்கை எழில் கண்களுக்கு விருந்தளிக்கும். இந்தப் பாதையில் தொடர்ந்து, முன்பு போல், நாகூர், நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, ராமேஸ்வரம், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் பயணிகள்!