ராமநாதபுரத்தில் கடந்த வாரம் பாஜக., பிரமுகரை வெட்டிய 3 பேர் கொண்ட கும்பல் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்-அப்’ மூலம் இயங்கிய பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கீழக்கரையில் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
‘வாட்ஸ்-அப்’ மூலம் இயங்கிய பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த 3 இளைஞர்கள் கீழக்கரையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.
ராமநாதபுரம் மாவட்ட பாஜக., நிர்வாகி வீரபாகு கடந்த வாரம் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக போலீசார் சிலரைப் பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
பயங்கர சதித் திட்டங்களுடன் பயங்கரவாத கும்பல் ஒன்று ரகசியக் கூட்டம் நடத்தி செயல்பட்டு வருவதும், இந்த கும்பல் முதல் கட்டமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கூட்டம் நடத்தி விவாதித்ததுடன், அடுத்த கட்டமாக கீழக்கரையில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருவதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசார் கீழக்கரைக்குச் சென்று முகமது ரிபாஸ் (வயது 35) என்பவரைக் கைது செய்தனர். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவர் கீழக்கரையில் திருமணம் செய்து கொண்டு, அங்கேயே வசித்து வருகிறார். இவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வீரமரணம் எங்கள் இலக்கு என்ற கொள்கையின் அடிப்படையில் தாங்கள் ‘வாட்ஸ்-அப்’பில் குழுவாக செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் சென்னையில் செயல்படும் எம்.என்.சி., நிறுவனம் ஒன்றில் பணி புரியும் தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த முபாரிஸ் அகமது (21), சென்னை புதுக் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் (23) மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான 3 பேரிடம் இருந்தும் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும், 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள், ‘வாட்ஸ்-அப்’ குழுவில் பயங்கரவாத சதித்திட்டங்களுடன் கலந்துரையாடியதும், போலீஸில் பிடிபட்ட போது தங்கள் வாட்ஸ் அப் குழு தகவல்களை அழித்துவிட்டதாகவும் கூறிய போலீஸார், சைபர் க்ரைம் பிரிவை நாட உள்ளதாகக் கூறினர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக துப்பாக்கி வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்ததும், இதற்காக ஏற்பாடு செய்த நபர் சரியாக ஒத்துழைக்காததால் துப்பாக்கி வாங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.