சென்னை: போர் தொடுத்து நாடுகளை வெல்வதை விட அன்பினால் மனங்களை வெல்வதே இந்தியாவின் வழி, இந்தியாவின் விருப்பம் என்று பேசினார் பிரதமர் மோடி. தனது பேச்சில் தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றணைத் தூறும் அறிவு என்ற திருக்குறளையும் மோடி மேற்கோள் காட்டிப் பேசினார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் சென்னையை அடுத்த திருவிடவெந்தையில் டி எக்ஸ்போ 18 என்ற பாதுகாப்புத் துறை கண்காட்சி நடத்தப் படுகிறது. வரும் 14ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி, ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியாவின் வலிமையை எடுத்துக் காட்டுவது, உள்நாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின், தளவாட உற்பத்தியில் ஈடுபடுத்துவது, அதிகரிப்பது என்பதற்காக நடத்தப் படுகிறது. தமிழகத்தில், இப்படி ஒரு ராணுவக் கண்காட்சி நடத்தப்படுவது இதுவே முதல் முறை.
இந்தக் கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்துப் பேசிய போது, இது தனது முதல் கண்காட்சி அனுபவம் என்று கூறினார். முதலில் காலை வணக்கம் என தமிழில் கூறி, தனது உரையைத் துவங்கிய மோடி, சோழ மன்னர்களால் பெருமை பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்றும், வலிமையான ராணுவத்தை வழிநடத்தி உலகம் முழுதும் சோழ மன்னர்கள் வணிகம் நடத்தியதையும் நினைவு கூர்ந்தார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடல் கடந்த வணிகத்தில் சிறந்த விளங்கிய தமிழகத்தில் சோழ மன்னர்கள் ஆண்ட பகுதியில் நீங்கள் இந்த அளவுக்குக் கூடியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசிய போது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அர்த்த சாஸ்திரம் என்பதன் மூலம் கௌடில்யர் நமக்கு நல்ல அறிவுரைகளைக் கூறியுள்ளார். உலகிற்கு அகிம்சையை கற்றுக் கொடுத்தது இந்தியா. நாம் எந்த நாளும் எல்லையை மீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது இல்லை. போர் தொடுத்து பிற நாடுகளை வெல்வதை விட மக்கள் மனங்களை வெல்வதே இந்தியாவின் விருப்பம்.
அமைதியை விரும்பும் அதே நேரத்தில், நாட்டு மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்கான பங்களிப்பை நம் எல்லையில் ராணுவம் வழங்குகிறது. ஐ.நா. அமைதிப் படையில் இணைந்து, உலகம முழுதும் இந்திய வீரர்கள் அமைதிப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அமைதி வழியில் ஆட்சி செய்யும் போது, ஆயுதங்கள் எதற்கு எனக் கேள்வி எழுலாம். அமைதியை நிலைநாட்டவும் ஆயுதங்கள் தேவைதான்.
சில வருடங்களுக்கு முன் சிறிய அளவில் துவங்கிய ராணுவ தளவாட உற்பத்தி, தற்போது அசுர வளர்ச்சியடைந்துள்ளது. உள்நாட்டு ராணுவ உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தொழில்துறைக்கு சாதகமாக வெளிப்படையான கொள்கைகள் வகுக்கப் பட்டுள்ளன. ஏற்றுமதிக் கொள்கைகளை எளிமைப்படுத்தி மக்கள் பார்வைக்கு வைத்துள்ளோம்.
நாம் தளவாட கொள்முதல் செய்வதை விட நம்மிடம் கொள்முதல் செய்ய வேண்டும். பாதுகாப்பு துறையில் சிறு குறு நடுத்தர தொழில்துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட தேவையான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு துறை உற்பத்தி, ஏற்றுமதி, அன்னிய நேரடி அன்னிய முதலீடு போன்றவற்றிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகம், உத்தரப் பிரதேசத்தில் இரண்டு தொழில் பாதுகாப்பு வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் தொழில்துறை மேம்படும். வேலைவாய்ப்புகள் பெருகும். எதிர்காலத்தில் இந்த 2 வழித்தடங்கள் தான் இந்தியாவின் தொழில் வளர்ச்சியை நிர்ணயிக்கப் போகின்றன. தளவாட உற்பத்திக்கு தேவையான உதவிகள் மேற்கொள்ளப் படும் என்று பேசினார் மோடி.
அவரது பேச்சில் இருந்து…