சென்னை: தமிழகத்தில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது சிறப்பு வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் பயம் கொள்ள வேண்டாம் என்று தமிழக மருத்துவ கல்வி இயக்குனர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை அரசு பொதுமருத்துவமனையில் செய்தியாளரிடம் பேசிய அவர், “பன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இது பயப்படக்கூடிய நோய் அல்ல. காய்ச்சல், ஜலதோஷத்திற்கும், பன்றிக் காய்ச்சலுக்கும் வித்தியாசம் உள்ளது. 101 டிகிரிக்கு மேல் காய்ச்சல் அடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான சிகிச்சைகள் தயார் நிலையில் உள்ளன. 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க டாக்டர்கள், நர்ஸ்கள் தயாராக இருக்கிறார்கள். காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தொண்டை வலி இருந்தால் மருந்து கடைக்கு நேரடியாக சென்று மருந்து வாங்கி சாப்பிடக்கூடாது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்களை அணுக வேண்டும். கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பன்றிக்காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும். டாமிபுளூ மாத்திரையும் டானிக்கும் சாப்பிட்டால் இது குணமாகிவிடும். பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 221 படுக்கைகளும், 71 வெண்டிலேட்டர் கருவிகளும், 824 தற்காப்பு உபகரணங்கள், முக உறைகள் மற்றும் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. நோய் பரவாமல் தடுக்க பொது இடங்களுக்கு சென்று வரும் போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும. இருமல், தும்மல் வரும் போது கைக்குட்டையால் முகத்தை மூட வேண்டும். எந்த காய்ச்சலாக இருந்தாலும், அதற்கு சரியான சிகிச்சை அளிக்கவும், தேவையான பரிசோதனை மேற்கொள்ளவும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பற்றி பொது மக்கள் பீதி அடைய வேண்டாம். தற்போது சென்னை மற்றும் கோவையில் 7 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை அரசு மருத்துவமனையில் இதற்கான சிறப்பு வார்டில் 27 வெண்டிலேட்டர்களும், 30 படுக்கை வசதியும் செய்யப்பட்டு உள்ளன” என்று கூறினார்.
Popular Categories