சென்னை: ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம்தான் என்று உச்ச நீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்த வழக்கின் இறுதீத் தீர்ப்பில் ஸ்கீம் என குறிப்பிடப் பட்டிருப்பது, காவிரி மேலாண்மை வாரியம்தான் என உச்ச நீதிமன்றமே விளக்கம் அளித்துள்ளதாக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வில்லிவாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது அவர், ஸ்கீம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை, மத்திய அரசு டிக்ஸ்னரியை பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்று கோபமாகக் கூறினார்.
காவிரி வாரியம் அமைக்கும் போராட்டத்தில் அதிமுக தனித்து செயல்படவில்லை. காவிரிக்கு எதிரான துரோகங்களை மறைக்கவே திமுக செயல் தலைவர் நடைபயணம், போராட்டங்களை நடத்துகிறார். ஸ்டாலினின் காவிரி உரிமை மீட்பு பயணம் தோல்வியடைந்துள்ளது என்றார்.
தேர்தலை கண்டு அஞ்சி நடுங்கி ஓடுகின்ற இயக்கம் அதிமுக கிடையாது. தேர்தலின் போது அதிமுகவிற்கு மக்கள் அங்கீகாரம் வழங்குவார்கள் என்று கூறினார்.
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு முறையாக பரிசீலித்து முடிவெடுக்கும் என்றார் ஜெயக்குமார்.