அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவிக்கு வரும் ஏப்.28 வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டதை அடுது அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியின் கணிதப் பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் பல்கலைக் கழக உயர் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து நடந்து கொண்டால், பணம், மதிப்பெண், வேலைவாய்ப்பு, உயர் கல்வி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்து தருவதாக செல்போனில் மூளைச் சலவை செய்து பேசிய ஆடியோ பதிவு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரபை ஏற்படுத்தியது.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாகக் கூறி இந்தப் பேராசிரியைக்கு எதிராக மாணவிகள், மாதர் சங்கம் என போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப் பட்டது. அதன் அடிப்படையில் போலீஸார் நிர்மலா தேவியை கைது செய்து, ஜாமீனில் வெளி வரமுடியாத மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இவர் மீதான விசாரனை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப் பட்டது. மேலும், ஆளுநரும் இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அனுப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்தார்.
இந்நிலையில் இன்று மாலை பேராசிரியை நிர்மலா தேவி விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.