அருவறுப்பு அருப்புக்கோட்டையில் ஆரம்பித்து வைத்த அசிங்கமான போராட்டம் இப்போது எச்ச துப்பிப் போராடும் நிலைக்கு வந்திருக்கிறது.
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்து செல்லும் விதமாக செல்போனில் பேசிய ஆடியோ ஊரெல்லாம் பரவினாலும் பரவியது, இப்போது தமிழக அரசியலே அசிங்கங்களின் உச்சமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. சுமார் 60 ஆண்டுகால திராவிட இயக்கங்களின் ஆட்சியில் அண்ணா, கருணாநிதி இவர்கள் தொடங்கி வைத்த அருவறுப்பு அரசியல் பேச்சின் தொடர்ச்சியாக அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்ட அநாகரீகப் பேச்சாளர் வெற்றி கொண்டான் பாணியில் இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
முன்னர் ஏதோ ஓர் ஊரில் ஒரு சந்தைப் பகுதியில் அல்லது பேருந்து நிலையத்தில் இது போன்ற மேடைப் பேச்சுகள் பொதுவில் நடத்தப்படும். அவற்றை அனைவரும் கேட்டு அருவறுப்பு அடையக்கூடிய வாய்ப்பு கிடைக்காது. ஆனால் இப்போது டிவிட்டரும், யுடியூபும் சமூக வலைத்தளங்களும், அவற்றை எடுத்துப் போட்டு செய்தியாக்கி, அனைத்து வீடுகளின் வரவேற்பறைக்கே கொண்டு வந்து அனைவரின் காதுகளிலும் கேட்கச் செய்யும் செய்தி ஊடகங்களின் தயவால், வீட்டுப் பெண்கள் தொடங்கி அனைவரும் அருவறுப்பு அடைகின்றனர்.
ஒரு பேராசிரியை மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த வார்த்தைகளை பெரும்பாலும் எல்லோரும் கேட்டாயிற்று. தொடர்ந்து 80 வயதை நெருங்கும் ஆளுநர் கிழவரை தாத்தா மாதிரிதான் ஆனால்.. என்று வம்புக்கு இழுத்து, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியும் விட்டாயிற்று. இப்போது, பெண்களை வைத்து அரசியலை ஓட்டிக் கொண்டிருக்கும் இழி நிலைக்கு தமிழக அரசியல் வந்திருக்கிறது.
பாஜக.,வில் உள்ள பெண்களை வம்புக்கு இழுத்து, அருவறுக்கத் தக்க வாசகங்களால் இணையத்தில் சில கட்சிகளின் தொண்டர்கள் அவதூறு பரப்பியபோது, பாஜக.,வினர் வெகுண்டெழுந்தார்கள். வழக்கம் போல் கையைப் பிசைந்து கொண்டிருக்காமல், இந்த முறை அறிவு ஆலய தலைமைப் பீடத்தின் பீடாதிபதியையே வம்புக்கு இழுத்தார்கள். அதைச் செய்தவர் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா. அவர் அந்தத் தலைவரை குறி வைக்கப் போய், அந்தக் கருத்தோ பெண்ணை இழிவுபடுத்தும் விதத்தில் சென்றது. இதனால் கொதித்தெழுந்த திமுக.,வினர் ஹெச்.ராஜாவையும் அவரது குடும்பத்தையும் வம்பிக்கு இழுத்து நடுத்தெருவில் நிறுத்தினார்கள்.
தொடர்ந்து, மோசமான சொல்லாடல்களால் சமூக இணையதளம் நிரம்பி வழிந்தது. ஹெச்.ராஜாவை எச்.ராஜா என்றும் எச்ச ராஜா என்றும் கூறி வந்த திமுக., எடுபிடிகள், இப்போது அதே வார்த்தையை வைத்து, எச்ச துப்பி போராட்டம் நடத்தியுள்ளனர். திமுகவினர் ஹெச்.ராஜாவின் புகைப்படத்தை குப்பைத் தொட்டியில் ஒட்டி, அதன் மீது எச்சில் துப்பி போராட்டம் நடத்தினர்.
முன்னதாக இன்று காலை, ஆர்.ஏ.புரம் மூப்பனார் பாலத்தில் ஹெச்.ராஜாவின் உருவபொம்மையை தொங்க விட்டு, தூக்கில் தொங்குவது போல் போராட்டம் நடத்தி அதையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இப்போது இந்தப் போராட்டங்களுக்கு பதிலடி போராட்டங்களாக பாஜக., என்ன வித்தியாசமாக நடத்தப் போகிறதோ என்ற கலக்கத்தில் உள்ளனர் அரசியல் நோக்கர்கள்.