நேற்று திருச்செந்தூர் அருகே உடன்குடியில் வைகோ பிரசாரத்துக்கு வருவதாக இருந்த நிலையில், பாஜக.,வினர் அவருக்கு கருப்புக் கொடி காட்ட திரண்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், வைகோவிடம் தகவல் சொல்லி, மாற்றுப் பாதையில் செல்லுமாறு கூறினர். ஆனால் அதற்கு வைகோ, நான் திட்டமிட்ட பாதையில் தான் வருவேன் என்று கூறினார்.
இதை அடுத்து, அந்தப் பாதையில் திரண்டிருந்த பாஜக.,வினர், வைகோவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி, கருப்புக் கொடி காட்டினர்.
இதனால் கோபமடைந்த வைகோ, நான் மோடி மாதிரி ஓட மாட்டேன் அங்கேயே நிப்பேன்… இங்கதான் நிப்பேன்… இங்கதான் பேசுவேன். என்று உணர்ச்சி வேகத்தில் கத்திப் பேசிக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து, தனது தொண்டரைப் பார்த்து, ஏ தம்பி ஒத்தர ஒன்னும் செய்யாத.. அவங்க என்னவேணா காட்டட்டும்… போலீஸ் நீங்க பேசாம உட்டுடுங்க… அவங்கள காட்ட உடுங்க.. கிட்ட வந்து காட்டட்டும்.. என்று கூறினார்.
தொடர்ந்து கூச்சல் இருந்து கொண்டிருந்ததால், தமிழ்நாட்டை நாசம் செய்யத் துடிக்கின்ற நாசகார கூட்டம் மோடி கூட்டம்
நாசகாரக் கூட்டம் மோடியின் கூட்டம். அழிவு சக்தி மோடியின் கூட்டம் என்று கத்திக் கொண்டே இருந்தார்….
அவங்களை காட்ட வுடுங்க என்று வைகோ வேண்டுகோள் விடுத்ததால், கல்லெறிந்து ஒரு காட்டு… காட்டி விட்டார்கள் பாஜக.,வினர்.
இதன் பின்னர் கைகலப்பு ஏற்பட்டதால், போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.