தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும்; நீட் தேர்வு நாளான மே 6ம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு மே 6 ஆம் தேதி நடக்கிறது. நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மாணவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கி சிபிஎஸ்இ உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இதனை விசாரித்த நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதனை பொது அறிவிப்பாகக் கருதி தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையம் தொடர்பான விவரத்தை சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.