தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டது. ஆனால், ஒரு குற்றவாளியின் படத்தை சட்டமன்றத்தில் திறக்கக் கூடாது என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும் கோரி, திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரி வாக்கெடுப்பு நடத்தியபோது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவை மீறி, எதிர்த்து வாக்களித்தனர். எனவே அவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த இரு வழக்குகளையும் விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, இன்று இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
இவ்வாறு, பரபரப்பைக் கிளப்பிய இந்த இரு வழக்குகளிலும் தங்கள் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால் அதிமுக.,வினர் மகிழ்ச்சி அடைந்தனர். தீர்ப்பில் நீதிபதிகள் முக்கியமாக குறிப்பிட்டது அவைத்தலைவரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பது. எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் அவைத்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததற்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சட்ட ஆலோசனைக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் மயிலாடுதுறையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran