ஸ்ரீவில்லிபுத்தூர்: அருப்புக்கோட்டை கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை செல்போன் மூலம் தவறான வழியில் செல்ல அழைத்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் அளித்த அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார் பேராசிரியை நிர்மலா தேவி. அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
பின்னர் சாத்தூர் 2-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப் பட்டதன்பெயரில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நிர்மலாதேவியின் காவல் முடிவடைந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் இருந்து போலீசாரால் வேனில் கொண்டு வரப்பட்டு விருதுநகர் 2-ஆவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கமான நீதிமன்ற நடைமுறைக்குப் பின் நிர்மலாதேவியை வரும் 23 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து அவர் மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.
இந்நிலையில் நிர்மலா தேவி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலாவது மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு அளிக்கப் பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும், இந்த வழக்கில் கைதான முருகன், கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை 18 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது.