- நிதி நெருக்கடி காரணமாக, மீண்டும் மதுரை கோட்டத்துடனேயே இணைகிறது நெல்லை கோட்டம்
- 2010ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது நெல்லை கோட்டம்
- சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது நெல்லை மண்டலம் #TNSTC
சென்னை: கடும் நிதி நெருக்கடி, நஷ்டத்தில் இயங்கி வரும் போக்குவரத்துக் கழக கோட்டம் என சிக்கல்களால் தவித்த அரசு போக்குவரத்து கழக நெல்லை கோட்டம், மதுரை மண்டலத்துடனேயே இணைக்கப் பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சென்னை, மதுரை, நெல்லை, கோவை, கும்பகோணம், சேலம் என 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பஸ்கள் இயக்கம் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு சுமார் ரூ.26 கோடி கிடைக்கிறது. ஆனால், செலவோ பல மடங்கு செல்கிறது.
வரவுக்கு மீறிய செலவினங்களால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒவ்வொரு நாளும் நஷ்டத்தில் தள்ளாடுகின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.14 கோடி வரை போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க அமைக்கப் பட்ட வல்லுநர் குழு தெரிவித்த யோசனைப் படி, செலவை குறைக்கும் வகையில் போக்குவரத்துக் கழகங்களை இணைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
முதல் கட்டமாக, திருநெல்வேலியை மதுரை போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்க அறிவுறுத்தப் பட்டது. கடந்த 2010-ல் நெல்லை புதிய மண்டலமாக உருவாக்கப்பட்டது. நெல்லை மண்டலத்தில் 30 பணிமனைகள் உள்ளன. அவற்றில் 1897 பஸ்கள் உள்ளன. இவற்றுக்காக 12,478 பேர் இந்த மண்டலத்தில் பணிபுரிகின்றனர்.
தமிழ்நாட்டிலேயே நெல்லையில்தான் பஸ்கள் மோசமாக பராமரிக்கப் படுகின்றன என்று கூறப்படுகிறது. மற்ற மண்டலங்களில் இருந்து கழித்துக் கட்டிய பேருந்துகளை நெல்லைக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என்றும், இங்கே இயக்கப்படும் 90 சதவீத பேருந்துகள் காலாவதியானவை என்றும் கூறப் படுகின்றன. இங்கு ஆண்டுக்கு சுமார் 2,000 கோடி நஷ்டம் ஏற்படுவதால், இந்த மண்டலத்தை மதுரையுடன் இணைத்துவிட்டால் செலவு குறையும் என அறிக்கை தரப்பட்டது.
இதை அடுத்து, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகம் மதுரையுடன் இணைக்கப் பட்டுள்ளதாக இன்று அரசாணை வெளியிடப் பட்டது.