காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, இன்று காலை தஞ்சை விவசாயிகள் மோடி, சீத்தாராமையா படங்களை எரித்து போராட்டம் மேற்கொண்டனர். மேலும் தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிட முயற்சி செய்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் தஞ்சை மேலவஸ்தா சாவடியில் இருந்து புறப்பட்டு, புதுக்கோட்டை சாலையில் உள்ள விமானப்படைத் தளத்தை முற்றுகையிடச் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அவர்கள், சாலை மறியல், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பிரதமர் மோடி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரின் உருவப் படங்களை எரித்து எதிர்ப்பு முழக்கங்களையும் எழுப்பினர்.
இதை அடுத்து அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். இதனால் தஞ்சை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.