தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக அறியப்பட்ட சசிகலா, உடன்பிறந்த சகோதரியாகக் கொண்டு அரசியல் செய்து வந்த திவாகரனால் இப்போது முன்னாள் சகோதரியாக அறியப் படுகிறார்.
சசிகலாவை இனி நான் என்னுடைய சகோதரி என்று அழைக்க மாட்டேன் என்றும், சசிகல இனி என் முன்னாள் சகோதரி என்றும் கடுங் கோபமாகக் கூறியுள்ளார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.
சசிகலா குடும்பத்தில் அரசியல் தகராறு இப்போது சூடு பிடித்துள்ளது. அதிமுக.,வை கைப்பற்றுவோம், அதிமுக., அலுவலகம் இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றுவோம் என்று கூறி அரசியல் செய்யத் துவங்கிய தினகரனால், எதுவும் செய்ய முடியாமல், தனிக்கட்சியும், ஒரு எம்.எல்.ஏ., பதவியும்தான் பெற முடிந்தது. அதிமுக., என்ற கட்சி மரியாதை மதிப்புடன் வலம் வந்த தினகரன் ஆதரவாளர்களால் இப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை வைத்து அரசியல் செய்ய முடியவில்லை.
இதனால் அதிமுக., அம்மா அணியை உயிர்ப்பிக்க சசிகலாவின் சகோதரர் திவாகரன் மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. சசிகலாவே, தன்னை சகோதரி என்று கூறிக்கொண்டு, தன் பெயரை பயன்படுத்தி அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். இது தினகரனுக்கு ஆதரவாக சசிகலா செயல்படுவதையும், திவாகரனுக்கு எதிராக செயல்படுவதையும் வெளிப்படுத்தியது.
இந்நிலையில், தினகரனும் திவாகரனும் ஒருவரை ஒருவர் கடுமையாக குற்றம் சுமத்தி ஊடகங்களில் பேசி வருகின்றனர். உடல் நிலை சரியில்லாதவர், மன நிலை சரியில்லாதாவர் என்றெல்லாம் பேசி வந்த நிலையில், திவாகரன் தன் அரசியல் பயணம், சசிகலாவின் நோட்டீஸால் ஒன்றும் நின்றுவிடாது என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து மன்னார்குடியில் திவாகரன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தினகரனின் மிரட்டல் அரசியலின் உச்சம்; எங்கள் அரசியல் பயணம் நின்று விடாது. சசிகலாவை இனி நான் சகோதரி என்று அழைக்க மாட்டேன்; அவர் என் முன்னாள் சகோதரி.. என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதாவிடம் இருந்து அதிமுக.,வை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்ற நினைத்த சசிகலாவின் குடும்பம் இப்போது சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது; இதற்கு ‘பழிவாங்கும் அம்மாவின் ஆன்மா’தான் காரணம் என்று அதிமுக., விசுவாசிகள் கூறிவருகின்றனர்.
அதே நேரம், சசிகலா குடும்பத்தினர் இப்போது ஆடுவது ஒரு நாடகம். தினகரை வைத்து ஒரு புறமும் திவாகரனை வைத்து இன்னொரு புறமும் நாடகம் ஆடி, அதிமுக.,வில் திவாகரனை கோர்த்து விட்டு வேறு வகையில் குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்ட மேற்கொள்ளும் முயற்சி என்று அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர் அதிமுக., மூத்த தலைகள்.