சேலம்: வீட்டுக்கு டிவி., பார்க்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே பூலாம்பட்டி இருப்பாலி மேல்அக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஈஸ்வரன். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2012 நவ.12 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, அருகில் வசித்து வந்த ஒன்பது வயதுச் சிறுமி, ‘டிவி’ பார்ப்பதற்காக இவரது வீட்டுக்கு வந்துள்ளார்.
தனியாக இருந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த இளைஞர் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அழுது கொண்டே வீட்டுக்குத் திரும்பிய சிறுமி, அவரது பெற்றோரிடம் இது பற்றிக் கூறியுள்ளார். இதை அடுத்து, பூலாம்பட்டி போலீஸில் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிறுமியை பலாத்காரம் செய்த ஈஸ்வரனை கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று இந்த வழக்கைல் அந்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்தார்.