திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் மதிமுக., நாம் தமிழர் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இரு கட்சியினரும் கொடிக் கம்புகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
மதிமுக., பொதுச் செயலர் வைகோவுக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் ஏற்கெனவே வார்த்தை மோதல்கள் உள்ள நிலையில், இன்று கட்சியினர் கடும் மோதலில் ஈடுபட்டுக்கொண்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒரே விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சி சென்றனர்.
அவர்கள் இருவரையும் வரவேற்க இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் திருச்சி விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். விமான நிலையத்தில் வந்து இறங்கிய வைகோ, முதலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். காவிரி விவகாரம், கர்நாடக பிரச்னை ஆகியவை குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரை வாழ்த்தி கோஷமிட்டனர் மதிமுக.,வினர். அது கூடியிருந்த நாம் தமிழர் தொண்டர்களை எரிச்சலடைய வைத்துள்ளது. பின்னர், வைகோ காரில் ஏறி தஞ்சைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அவருக்குப் பின்னர் அங்கே வந்தார் சீமான். அவரை அழைத்துச் செல்வதற்காக, அவரது கார் ஓட்டுநர், காரை நகர்த்தியுள்ளார். அப்போது அங்கே இருந்த மதிமுக., தொண்டர்களை விலகி நிற்குமாறு நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் கூறியுள்ளனர். இதனால் இரு கட்சித் தொண்டர்களுக்கு இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், வாக்குவாதம் முற்றி திடீரென கைகலப்பில் இறங்கி இரு கட்சித் தொண்டர்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். அவர்கள், தாங்கள் கைகளில் வைத்திருந்த கட்சிக் கொடி கம்புகளையே தடிகளாக்கி, கொடிகளை உருவிப் போட்டு ஒருவரை ஒருவர் அடித்துத் துவைக்கத் தொடங்கினர்.
இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினருக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. நாம் தமிழர் தொண்டர் ஒருவருக்கு மண்டை உடைந்தது. இந்த கைகலப்பு வன்முறை நிகழ்ந்து கொண்டிருந்த போது, அந்த இடத்தில் காவலர்கள் அதிகம் இல்லை. இருந்த ஓரிரு உளவுப் பிரிவு போலீஸாரும் சீருடையில் இல்லாததால், அவர்கள் தடுக்க முயன்றும் இயலவில்லை. இந்நிலையில் அடிபட்ட நாம் தமிழர் தொண்டரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சாதாரண உடையில் மோதலைக் தடுக்க முற்பட்ட உளவுத்துறை போலீஸ் அதிகாரிகளுக்கும் அடி விழுந்தது. இறுதியில் காவல்துறையினர் தலையிட்டு இரு கட்சியினரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.
பின்னர் அந்தப் பக்கம் வந்த சீமானிடம் செய்தியாளர்கள் இந்தத் தகராறு குறித்து கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. கேட்டுவிட்டு பிறகு சொல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.
இரு தரப்பின் அடிதடியால், விமான நிலையத்துக்கு வந்திருந்த மற்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.