சென்னை: ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான தி.மு.கவின் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்த தமிழக சபாநாயகர் தனபால், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் தி.மு.கவினர் பேச அனுமதிக்கப்படுவர் என்றார்.
இந்நிலையில், தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலில் ஸ்டாலினை பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு சபாநாயகர் தனபால், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள் தான் முதலில் பேச அழைக்கப்படுவர் என்றார்.
இதை தொடர்ந்து, நேரமில்லா நேரத்தில் முதலில் எதிர்கட்சி தலைவரை பேச அனுமதிக்க வேண்டும் என்று தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த சபாநாயகர் தனபால், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் உள்ள விவகாரங்களை நேரமில்லா நேரத்தில் பேச முடியாது என்றார்.
தீர்மானத்தை ஏற்க மறுத்ததற்கு திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி விவகாரத்தில், தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்காதது ஏன்? என்று, எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பினார்.
விசாரணை ஆணையம் கண்துடைப்பு எனவும், ஸ்டெர்லைட்டை முழுவதுமாக மூடவில்லை எனவும் மக்கள் நினைக்கின்றனர் என்று தினகரன் கூறினார். தூத்துக்குடி சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் தினகரன் கோரிக்கை எழுப்பினார்.
இந்நிலையில், அதிமுக உறுப்பினர்களுடன் தினகரன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவையில் அமளி நிலவியது.