பிளாஸ்டிக் பொருள் தடைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மருத்துவர் ராமதாஸ், 2002 சட்டம் போல் கைவிடக்கூடாது என்றும் அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ என்பதை 2018 உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐநா முன் வைத்துள்ள நிலையில், பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சிகள் ஆகியவற்றைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது. 2019- ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள தமிழக அரசின் இந்த அறிவிப்பை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.
ஆனால், மட்காத, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதிப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே, 7.5.2002 அன்று பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்தார். ஆனால், 30.1.2003 அன்று வெளிப்படையான காரணம் எதுவும் இன்றி அச்சட்டத்தை திரும்பப்பெற்றார். இதற்கான காரணம் யாருக்கும் தெரியாத ரகசியமாகும்!
அப்போது அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில், 15 ஆண்டுகள் கழித்து தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் தடைவிதித்துள்ளது. பிளாஸ்டிக் தடை சட்டத்துக்கு 2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலைமை, இப்போதைய புதிய அறிவிப்புக்கும் ஆகிவிடக் கூடாது. இந்த புதிய பிளாஸ்டிக் தடை அறிவிப்பை தமிழ்நாடு அரசு உறுதியாக செயல்படுத்த வேண்டும்.