சென்னை: இந்து மதம் மற்றும், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீதும் கிறிஸ்துவ சமூக நீதி பேரவை அமைப்பு பாதிரிகள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்துமுன்னணி அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் சார்பில், காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் இன்று வெளியிட்ட அறிக்கை:
இந்து மதத்தை இழிவுபடுத்தியதுடன், இந்திய இறையான்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் ஏற்படுத்திய திருமாவளவனையும் கிறிஸ்தவ சமூக நீதி பேரவை அமைப்பைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரிகளையும் கைது செய்ய வேண்டும்.
கடந்த 31.5.18 அன்று கிறிஸ்தவ சமூகநீதி பேரவை என்ற அமைப்பின் சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வேக்கப் இந்தியா எனும் பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்த இந்திய வரைபடத்தில் காஷ்மீர் விடுபட்டுப் போயிருந்தது. இது திட்டமிட்டே கிறித்தவ பாதிரிகளால் செய்யப்பட்டுள்ளது. இந்த நாடு ஒரே நாடல்ல தனிதனி பிராந்தியம் எனவும் கூட்டமைப்பு எனவும் பிரிவினைவாதிகள் தமிழகத்தில் பேசி வருகின்றனர்.
மேலும் காஷ்மீர் பிரிவினைவாதியான யாசின் மாலிக்கை அழைத்து வந்து காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என்பதை போன்ற நிகழ்ச்சியும் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.
தற்போது இதன் தொடர்ச்சியாக காஷ்மீர் வரைபடம் இந்திய வரைபடத்தில் இடம் பெறவில்லை. பிரிவினைவாதிகளோடு சேர்ந்து கிறிஸ்தவ அமைப்புகளும் கூட்டுச்சதியில் ஈடுபடுவது இதன் மூலம் தெரியவந்துள்ளது. அரசு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் கலவர தினத்தில் சர்ச்சில் மணி அடித்து பாதிரிகள் கூட்டத்தை கூட்டியுள்ளனர். அதன் பிறகு நக்கலைட் பயங்கரவாதிகள் அங்கு கலவரத்தை நடத்தி காட்டினர். ஆக, கிறித்தவ சதி இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாகப் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் திருப்பூரில் கிறித்தவ அமைப்புகள் சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருமாவளவன் இந்து பெண்கள் பூப்பெய்தும் நிகழ்வையும் பூப்புநன்னிராட்டு விழாவையும் கொச்சைபடுத்தி பேசியுள்ளார். பூப்புநன்னிராட்டு விழா காலாகாலமாக இந்து மதத்தில் நடத்தப்படும் முக்கிய சடங்காக இருந்து வருகிறது. இந்த சடங்குகளை பட்டியல் இன மக்களும் செய்து வருகின்றனர். தலித் மக்களின் தலைவர் என சொல்லிக்கொள்ளும் திருமாவளவன் தலித் மக்களையும் சேர்த்து இதன் மூலம் அவமானப்படுத்தியுள்ளார். திருமாவளவனின் தலித் துரோகம் ஒவ்வொரு முறையும் வெளிப்பட்டு வருகிறது இதனை புரிந்து தலித் மக்கள் திருமாவளவனை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.
கிறிஸ்தவ மதத்தில் உள்ள ஜாதி வேறுபாடு, தீண்டாமை போன்றவற்றை வசதியாக மறைத்துவிட்ட திருமாவளவன் கிறிஸ்தவ கூட்டத்தில் கலந்து கொண்டு இந்து மதத்தை இழிவுபடுத்தியதின் மூலம் கிறிஸ்தவ பாதிரிகளின் ஏஜெண்டாக திருமாவளவன் இருப்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது.
முஸ்லீம்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்து கோவில்களை எல்லாம் இடிக்க வேண்டும் என்று பேசுகிறார். கிறிஸ்தவ கூட்டத்தில் கலந்து கொண்டு இந்து மத சடங்குகளை கொச்சைபடுத்தி பேசுகிறார் இவரது நோக்கம் மதகலவரத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இவர் சமூக பதட்டத்திற்கு வித்திடும் வகையில் தொடர்ந்து செயல்படுவதால் இவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இந்திய வரைபடத்தை சர்ச்சைகுறிய விதத்தில் விளம்பரம் செய்து பிரிவினையை தூண்டிய கிறிஸ்தவ சமூகநீதி பேரவை அமைப்பின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசையும் காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறோம்.
இது தொடர்பான புகார் பல்லடம் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இந்த புகாரின் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்து முன்னணி, இந்து மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.