சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்குவதை ஒட்டி, தமிழகம் உச்ச கட்ட பரபரப்பில் உள்ளது.
தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக., சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22ஆம் தேதி தமிழக ஆளுநரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், தமிழக முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், முதல்வரை மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
இதை அடுத்து அந்த 19 பேருக்கும் எதிராக அதிமுக., நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் ஆளுநரிடம் மனு கொடுத்த ஜக்கையன், தனது நிலையை மாற்றிக் கொண்டார். எனவே எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி, அதிமுக கொறடா கடந்த ஆகஸ்டு 24 அன்று அவைத்தலைவருக்கு பரிந்துரைத்தார்.
அதன்படி, 18 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து செப்.18ஆம் தேதி எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து அவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டார். இந்நிலையில் 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துவதற்கான எந்த அறிவிப்பாணையும் வெளியிடக் கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கை நீதிபதி கே. ரவிசந்திரபாபு விசாரிக்கத் தொடங்கினர். அவர் இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் கடந்த நவ.6 ஆம் தேதி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் 18 எம்.எல்.ஏ தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டை நீதிபதிகள் ஏற்றனர். தொடர்ந்து, கடந்த நவ.16 முதல் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு விசாரிக்கத் தொடங்கியது. பின் ஜன.18 அன்று அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து, ஜன.23 அன்று அனைத்து தரப்பும் எழுத்து பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்தன.
தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சி கவிழுமா, எம்.எல்.ஏ.,க்கள் தகுதி இழப்பு சரியானதா, அவைத்தலைவர் நடவடிக்கை சரியானதுதானா என்று விவாதங்கள் களை கட்டியுள்ளன. எப்படி இருப்பினும், பாதிக்கப் பட்ட தரப்பினர் நிச்சயம் உச்ச நீதிமன்றத்தை நாடுவர் என்று கூறப்படுகிறது.