பதவி இழந்த ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் குறித்த தீர்ப்பு: என்ன சொல்கிறார் டிடிவி.,?

சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், எங்களுக்கு பாதி வெற்றி என்று கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் சட்டப் பேரவைத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டிருந்தது. இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி, அவைத்தலைவர் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று கூறினார். இன்னொரு நீதிபதி சுந்தர், இந்தத் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு அளித்தார்.

இப்படி இரு நீதிபதிகளும் கொண்ட அமர்வில் மாறு பட்ட தீர்ப்பு வழங்கப் பட்டதால், மூன்றாவது நீதிபதி இந்த வழக்கை விசாரித்து இறுதித் தீர்ப்பு வழங்குவார் எனக் கூறப்பட்டது. அந்த மூன்றாவது நீதிபதி யார் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும், அவரை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் தேர்வு செய்வார் என்றும் தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்ட மாறுபட்ட தீர்ப்பு குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது, புதுச்சேரி சட்டசபைத் தலைவர் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது இங்கே அவைத்தலைவர் உத்தரவில் தலையிட முடியாது என தீர்ப்பு வழங்கப்படுகிறது.

எங்களுக்கு 50 சதவிகித வெற்றி கிடைத்துள்ளது. விரைவில் 100 சதவிகித வெற்றி கிடைக்கும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் என்னுடன் தான் உள்ளனர். அவர்களின் முடிவே என் முடிவு. மக்களுக்கு எதிரான அரசு நீடிக்கிறது என்ற ஒற்றை வார்த்தையே எங்களின் பதிலாக இருக்கிறது. தீர்ப்பால் எங்களுக்கு எந்தவிதமான பின்னடைவும் இல்லை… என்று கூறினார்.

இதனிடையே சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இந்தத் தீர்ப்பு குறித்துக் குறிப்பிடும் போது, அவைத்தலைவரின் தகுதி நீக்க முடிவுக்கு ஆதரவாக நீதிபதிகள் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. மூன்றாவது நீதிபதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இரண்டு மாதங்களில் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வருமெனத் தெரிகிறது என்று கூறினார்.