காலா படம் நன்றாகப் போவதாக ரஜினி காந்த் சந்தோஷமாக இருக்கிறார். ஆனால், வசூலில் அது தோல்வியடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதை மறைக்கவே ரஜினி டார்ஜிலிங்கில் தங்கியிருப்பதாக திரைத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ரஜினி நடித்த காலா திரைப்படம் கடந்த 7ஆம் தேதி உலகம் முழுதும் வெளியானது. கர்நாடகாவில் மறு நாளிலிருந்து வெளியானது. இந்தப் படம் அரசியல் பின்னணியில் வந்ததால், இருவேறு அரசியல் சார்பு இந்தப் படத்துக்கு ஏற்பட்டது. படம் வெளியிடும் முன் எதிர்த்தவர்கள், படம் வெளியானபின் ஆதரவு தெரிவித்த்னர். படம் வெளியாகும் முன் ஆதரவு தெரிவித்த கட்சியினர் படம் வெளியான பின்னர் முகம் சுளித்தனர்.
இப்படி இந்தப் படத்துக்கு இரு வேறு விதமான விமர்சனங்கள் வெளிவந்தன. இருப்பினும் ரஜினிகாந்தின் முந்தைய படமான கபாலி படத்தைவிட காலா மிகவும் குறைவாகவே வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் மட்டும் படம் நல்ல வசூல் வேட்டையை நடத்தியிருப்பதாகவும், அதற்குக் காரணம், நிர்ணயிக்கப் பட்ட டிக்கெட் கட்டணங்களை விட முறைகேடாக வசூல் செய்திருப்பதுதான் என்கிறார்கள்.