திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 107 வது நினைவு தினம் இன்று காலை 10.31க்கு அனுசரிக்கப் பட்டது.
இதை முன்னிட்டு செங்கோட்டை நகர பிராமண சங்கத்தின் சார்பில் வாஞ்சி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்வுக்காக மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வேன்களில் பிராமண சங்கத்தினர் வந்திருந்து வாஞ்சியின் நினைவைப் போற்றி கோஷங்கள் எழுப்பியதுடன், வாஞ்சி சிலைக்கு மாலைகளை அணிவித்தனர்.
பிராமணர் சங்க மாநில மூத்த பொதுச் செயலாளர் வி.ஜெகந்நாதன், மதுரை மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணசுவாமி, தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் ஸ்ரீபதி ராமநாராயணன், குமரி மாவட்ட தலைவர் சீதாராமன் ஆகியோருடன் திரளாக மகளிர் அமைப்பினரும் வந்திருந்து வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
நெல்லை மாவட்ட தலைவர் ஏ.சிவக்குமார், நெல்லை மாவட்ட பொதுச் செயலர் ஆர்.சுப்ரமணியன், பொருளாளர் என்.ஐயப்பன், அமைப்புச் செயலர் கே.சீனிவாசன், துணைத் தலைவர் எம்.ராமசுவாமி, பேட்டை கிளை தலைவர் ஆர்.பரமேஸ்வரன், நாராயணம்மாள்புரம் கிளை தலைவர் என்.எஸ்.சங்கரன், சி.என்.கிராமம் கிளை தலைவர் வேங்கடசுப்பிரமணியம், என்.ஜி.ஓ.காலனி கிளை தலைவர் ஹெச்.ஏ.சர்மா, தியாகராஜநகர் கிளை தலைவர் பி.பி. சுந்தரேசன், மேலகரம் கிளை தலைவர் டி.குளத்துமணி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்து, வாஞ்சி மணி மண்டபத்தில் நினைவஞ்சலி செலுத்தினர்.