சென்னை: பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த ஒருவரின் கருத்தை பேஸ்புக்கில் பார்வர்ட் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் எஸ்வி சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.
சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் என்பவர், பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து எழுந்து செல்லும் நேரத்தில் ஆளுநரிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்க, அவர் நல்ல கேள்வி என்று சொல்லி கன்னத்தில் லேசாகத் தட்டினார். அது சம்பவத்தில் தொடர்புடைய பத்திரிகையாளர் புகாராக சமூக வலைத்தளங்களில் பகிரப் பட, தொடர்ந்து பிரச்னை ஆனது. இந்நிலையில், சில பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி ஒருவர் பதிவு செய்திருந்த கருத்தை எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், தான் படிக்காமல் பகிர்ந்ததாகவும், அது தவறு என உணர்ந்ததும் உடனே அதை நீக்கியதாகவும் கூறி மன்னிப்பும் கோரினார்.
இருப்பினும் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் மூலம் வழக்கு பதிவு செய்யப் பட்டது. உடனே எஸ்வி.சேகர் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமின் வழங்கவில்லை. அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமின் கோரினார். அது குறித்த விசாரணையில் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்து, அவரைக் கைது செய்ய தடை இல்லை என்று கூறியது.
இதனிடையே, நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் எஸ்.வி.சேகர் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். எஸ்.வி.சேகரை கைது செய்யக் கோரி முன்னர் பத்திரிகையாளர்கள் என சிலர் எஸ்.வி.சேகர் வீடு மீது கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். எனவே அவ்வாறு ஏதும் அசம்பாவிதம் நேர்ந்துவிடக் கூடாது என்பதால், நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.
நீதிமன்றத்தில் ஆஜரான எஸ்.வி.சேகருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம், மீண்டும் அவர் ஜூலை 18 ஆம் தேதி ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டது.