- நாமக்கல்லில் ஆளுநரின் கார் மீது கருப்புக் கொடி வீசியதாக கைதான 192 திமுகவினர் சேலம் சிறையில் அடைப்பு
- 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்ட 241 பேரில் 192 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் #DMK #Arrested
நாமக்கல்லில் தி.மு.க.வினரை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்ற திமுக., செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப் பட்டார்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் இருந்து கறுப்புக் கொடி ஏந்தி பேரணியாகச் சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடத்தத் திட்டமிடப்பட்டது. அதன்படி, இன்று காலை பேரணியாகச் செல்ல முயன்ற ஸ்டாலின் கைது செய்யப் பட்டார். முன்னதாக, ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டிய 192 தி.மு.க.வினர் சிறையில் அடைக்கப் பட்டனர்.
ஆளுனர் பன்வாரிலால் புரோகித் வருகைக்கு எதிராக நேற்று, நாமக்கல்லில் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்திய திமுகவைச் சேர்ந்த 192 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் ஜூலை மாதம் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமயந்தி உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள, மு.க. ஸ்டாலின், அரசியல் சட்டத்தின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டிய ஆளுநர், பாஜக.,வின் பிரதிநிதியாக செயல்படுவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல. கருத்து சுதந்திரத்தையும், அறவழிப் போராட்டங்களையும் ஒடுக்க உத்தரவிடுவது ஆளுநருக்கு எந்த விதத்திலும் மதிப்பளிக்காது. மிசா போன்ற நெருக்கடிகளையே சந்தித்த இயக்கம்தான் திமுக., எனவே இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்று கூறியிருந்தார்.
அஞ்சா நெஞ்சர்கள் திமுக., வினர் என்று குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட முயன்ற போது கைது செய்யப் பட்டுள்ளார்.