திடீர் போராட்டங்களில் ஈடுபட்ட சினி டைரக்டர் கௌதமன் திடீர் கைது!

சென்னை: சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக நடந்த போராட்டம் உள்பட திடீர் போராட்டங்களில் கலந்து கொண்ட இயக்குநர் கௌதமன் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.

காவிரிப் பிரச்னைக்காக அங்கங்கே போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் போராட்டங்களில் கலந்து கொள்ள ஆட்கள் வரமாட்டார்கள் என்றும், மக்களின் கவனம் வேறு பக்கம் திசை திரும்பி விடும் என்றும் கூறி, ஏப்ரல் 10ம் தேதி சென்னையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கூடி அண்ணா சாலையில் போராட்டம் நடத்தினர். அப்போது வன்முறையும் நிகழ்த்தப் பட்டது. பெண்கள் என்றும் பாராமல், மஞ்சள் பனியன் அணிந்திருந்தவர்களின் பனியன்களை கழற்ற வைத்து, போட்டி பார்க்க வந்தவர்களை காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கி, அடாவடியில் சிலர் ஈடுபட்டனர். இது தமிழக மக்களை வெறுப்பில் தள்ளியது.

அண்ணாசாலையில் நடைபெற்ற போராட்டங்களில் ஓய்வு பெற்ற சினிமா இயக்குனர்கள் பாரதிராஜா, சீமான், அமீர், கௌதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று திருவல்லிக்கேணி போலீஸார் இயக்குநர் கௌதமனை திடீரென கைது செய்தனர். அவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது போலீஸார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றதாக அவரது மனைவி மல்லிகா கூறியுள்ளார்.

கௌதமன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் கவுதமனுக்கு ஜூலை 6 வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.