விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை நடக்கிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளுகின்றனர். காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. இதில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
முதலில் விநாயகர் தேர், 2வது சுப்பிரமணியர் தேர், 3வது சுவாமி தேர், அதன்பிறகு அம்பாள் தேர் இழுக்கப்படுகிறது. இந்த தேர்களுக்கு பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். ஒரேநாளில் தேரை நிலைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை உள்ளூர் விடுமுறை என்பதால் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் அருணாசலம், மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தேரோட்டத்தையொட்டி மாநகர கமிஷனர் மகேந்தர்குமார் ரத்தோட் தலைமையில் 1500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 4 ரதவீதிகளிலும் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.