மீண்டும் மீண்டும் சிக்கும் ஜெய்! இம்முறை ஓஸிக்கு நடிக்க வேண்டியதாயிற்று!

அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மக்களுக்கு விளக்கும் விதமாக, நடிகர் ஜெய்யை வைத்தே, ஒரு வீடியோவைப் பதிவு செய்த போலீசார், அதனை சமூக வலைதளங்களிலும் பரவவிட்டனர். 

நடிகர் ஜெய்க்கும் சர்ச்சைக்கும் என்ன பாசப் பிணைப்போ..! போலீஸிலும் கூட அடிக்கடி சிக்குவார். அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டு மீண்டும் செய்திகளில் வலம் வருவார்.

இம்முறை அவர் போலீஸில் சிக்கியது, கார் ஓட்டிய விவகாரத்தில்! அதுவும் தடை செய்யப் பட்ட சைலன்சர் பயன்படுத்தி கார் ஓட்டியதற்காக!

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில், நேற்று இரவு அதிக சத்ததை எழுப்பிக்கொண்டு, கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த சத்தத்தைக் கேட்டு தெருவில் இருந்தவர்கள் அச்சத்தில் அலறினர். இந்நிலையில், காரை மடக்கி போலீசார் விசாரணை நடத்திய போது, அதனை ஓட்டி வந்தவர் நடிகர் ஜெய் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, தடை செய்யப்பட்ட சைலென்சரை இனி பயன்படுத்தக் கூடாது என அவரை போலீசார் எச்சரித்தனர். பின்னர், அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மக்களுக்கு விளக்கும் விதமாக, நடிகர் ஜெய்யை வைத்தே, ஒரு வீடியோவைப் பதிவு செய்த போலீசார், அதனை சமூக வலைதளங்களிலும் பரவவிட்டனர்.

நடிகர் ஜெய், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தான், போலீஸாரிடம் பிடிபட்டு பெரிய அளவில் செய்திகளில் தலை காட்டினார்.  குடி போதையில் கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் ஜெய்க்கு கார் ஓட்ட அப்போது ஆறு மாதம் தடை விதிக்கப்பட்டதுடன், அவரது ஓட்டுனர் உரிமமும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.