கர்நாடக அணைகளில் உபரி நீர் திறப்பு; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

இதை அடுத்து, ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் பரிசலில் செல்லவும் சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டாவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தருமபுரி: காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து, கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி வருவதை அடுத்து, காவிரியில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன்  காரணமாக, கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதை அடுத்து, அணைகளின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு,  கர்நாடகம் கபினி அணையில் இருந்து காவிரியில் நீரை அதிக அளவில் வெளியேற்றி வருகிறது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 16 ஆயிரம் கன அணி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 7 மணி நிலவரப் படி, நேற்றைய வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி வீதம் நீரில் இருந்து கூடுதலாக 2 ஆயிரம் கன அடி  தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதை அடுத்து, ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் பரிசலில் செல்லவும் சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டாவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.