
நாசரேத் அருகேயுள்ள பிரகாசபுரத்தை சேர்ந்தவர் பால்ஐசக் (52).இவர் பேரூரணி யிலுள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். பால்ஐசக் தனது நண்பரான கொம்மடிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ராஜா (45) என்பவருடன் உடன்குடியிலிருந்து திருச்செந்துாருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். ராஜா காரை ஓட்டியுள்ளார். கல்லாமொழி அருகே வரும் போது திடீரென கார் நிலைதடுமாறி ரோட்டோரத்திலிருந்த பனைமரத்தில் மோதியதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இவ்விபத்தில் எஸ்ஐ பால்ஐசக் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்கள். இதை பார்த்தவர்கள் இருவரையும் மீட்டு திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர் பால்ஐசக் இறந்து விட்டதாக கூறினார். ராஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து குலசேகரபட்டணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.