சென்னை: புகை, மது போன்ற பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கலாம், ஆனால் அத்தியாவசியப் பொருள்களுக்கு ஒரே வரி விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.
கடந்த வருடம் ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறை அமலாக்கப்பட்டது. அதன் முதல் ஆண்டு நேற்று கடைபிடிக்கப் பட்டது. அப்போது ஒரு பேட்டிக் கட்டுரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, மெர்சிடிஸ் காருக்கும் பாலுக்கும் ஒரே விதமான வரி என்பது சாத்தியமில்லை என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக., நிறுவுனர் ராமதாஸ், பாலுக்கும், காருக்கும் எப்படி ஒரே அளவில் ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடியும்? என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி! காருக்கும், புகை, மதுவுக்கு 100% கூட வரி விதித்துக் கொள்ளுங்கள். ஆனால், அவை தவிர்த்த அத்தியாவசியத் தேவை பொருட்களுக்கு ஒரே விகித வரி விதிக்கலாமே… அதற்கு என்ன தடை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உண்மையில் அத்தியாவசியப் பொருள்களின் வரி விகிதம் ஏழை எளிய மக்களின் பயன்பாட்டுக்குத் தக்க, இரு வித வரி விகித நடைமுறையில் வசூலிக்கப்படுகிறது. பல்வேறு பொருள்களின் விலை குறைந்ததற்கும் ஜிஎஸ்டி வரிவிகித நடைமுறையே காரணம். இதன் பலன் உடனடியாகத் தெரியாவிட்டாலும், இன்னும் ஓரிரு வருடங்களில் நன்றாகத் தெரியும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
ராமதாஸின் டிவிட்டர் பதிவு:
பாலுக்கும், காருக்கும் எப்படி ஒரே அளவில் ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடியும்?: பிரதமர் நரேந்திர மோடி – காருக்கும், புகை, மதுவுக்கு 100% கூட வரி விதித்துக் கொள்ளுங்கள். ஆனால், அவை தவிர்த்த அத்தியாவசியத் தேவை பொருட்களுக்கு ஒரே விகித வரி விதிக்கலாமே… அதற்கு என்ன தடை?
— Dr S RAMADOSS (@drramadoss) July 2, 2018