மணப்பாறையில் வைகை, திருப்பதி, அந்த்யோதயா ரயில்கள் நின்று செல்ல வைகோ வேண்டுகோள்!

மணப்பாறையில் வைகை, திருப்பதி, அந்த்யோதயா உள்பட அனைத்து இரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்த பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி – வேலை வாய்ப்புகளுக்காக சென்னை மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மணப்பாறையைச் சுற்றிலும் ஏராளமான சிறு தொழில் முனைவோர் உள்ளனர். புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயத்த ஆடைகள் தயாரித்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. மீனாட்சி நூற்பாலை, மாரீஸ் நூற்பாலை உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகளும்,  தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் இரண்டாம் அலகு தொழிற்சாலையும் மணப்பாறை அருகில் உள்ள மொண்டிப்பட்டியில் செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் ஏறத்தாழ மூவாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

திருச்சி, திண்டுக்கல்லுக்கு இடைப்பட்ட 110 கி.மீக்கு இடையில் மணப்பாறை இரயில் நிலையம் மட்டுமே உள்ளது. அகல ரயில் பாதை அமைக்கப்படுவதற்கு முன்பு மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று சென்றன. அதனால்தான் மணப்பாறை ரயில் நிலைய ஸ்டாலில் விற்கப்பட்ட மணி ஐயர் தயாரித்து வழங்கிய மணப்பாறை முருக்கு உலகப் புகழ் பெற்றது.

இத்தகைய பெருமைகளுக்கு உரிய நகரான மணப்பாறையில் பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் ஒரு சில துரித ரயில்கள் நின்று செல்கின்றன.

கடந்த ஆண்டு திருச்சி ரயில் நிலைய நிகழ்ச்சிக்கு வந்த அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இண்டர்சிட்டி ரயில் மணப்பாறையில் நிற்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை முன்வைத்துப் பேசியதும், அன்றைய தினமே அது மணப்பாறையில் நிற்கும் என்றும் ரயில்வே அமைச்சர் அறிவித்தார்.

தற்போது பகல் நேரத்தில் சென்னை பயணம் மேற்கொள்ள வசதியாக உள்ள மதுரை- சென்னை வைகை துரித ரயில், வாரம் மூன்று முறை இயக்கப்படும் ராமேஸ்வரம்-திருப்பதி துரித ரயில், தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட்ட அந்த்யோதயா ரயில் உள்பட அனைத்து இரயில்களையும் மணப்பாறையில் நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகின்றது.

மேலும், திருச்சிக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள், கட்டடத் தொழிலாளர்களின் நலன் கருதி திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு மற்றுமொரு புதிய பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் புதன்கிழமை மதிமுக., சார்பில் ரயில் மறியல் போராட்டம் மணப்பாறையில் நடைபெற உள்ளது. எனவே, மத்திய ரயில்வே நிர்வாகம் மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்… – என்று குறிப்பிட்டுள்ளார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.