கத்தியால் வெட்டி தாக்கிய ரவுடியை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய போலீஸார்!

சென்னை: சென்னையில் போலீஸாரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்ற ரவுடி ஆனந்தன் நேற்றிரவு நடந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

சென்னை: சென்னையில் போலீஸாரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்ற ரவுடி ஆனந்தன் நேற்றிரவு நடந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

சென்னை ராயப்பேட்டை பகுதியில், குடிபோதையில் பெண்களை கேலி கிண்டல் செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் வேலையில் ரௌடிகள் சிலர் ஈடுபடுவதாக காவல் நிலையத்துக்கு தகவல் வந்துள்ளது. அப்போது, ராயப்பேட்டை  காவல் நிலையத்தில் காவலராக இருக்கும் ராஜவேலு  வி.எம். தர்ஹா பகுதியில் ரோந்து சென்றிருந்தார். அவருக்கு காவல் நிலையத்தில் இருந்து தகவல் அளிக்கவே, அவர் வி.எம்.தர்ஹா பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கே குடிபோதையில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த ரவுடிக் கும்பலை அதட்டியுள்ளார். ஆனால் எங்களைக் கேட்பதற்கு நீ யார் என்ற ரீதியில், காவலரை அவர்கள் துரத்த முயன்றுள்ளனர். அப்போது, ரவுடி கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜவேலு அங்கிருந்து ரத்தம் சொட்டச் சொட்ட வெளியே ஓடி வந்துள்ளார். அந்த நேரம் அப்பகுதியில் வந்த ஆட்டோ ஓட்டுநரின் தயவில் ஆட்டோவில் ஏறி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராஜவேலுவை தாக்கியது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி, அங்கே கல்லறைப் பகுதியில் பதுங்கியிருந்த ரவுடிகள் அரவிந்தன், அருண் உள்பட 6 பேரைக் கைது செய்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புள்ள மேலும் 4 பேரை கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் தலைமையிலான தனிப்படையினர் தேடி வந்தனர்.

அந்த ரவுடி கும்பல் சோழிங்கநல்லூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கே சென்ற போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்ததில், அருண், ஸ்ரீதர், சுந்தர், ஆனந்தன் ஆகிய ரவுடிகளைக் கைது செய்தனர். அப்போது, காவலர் ராஜவேலுவை வெட்டி அவரிடமிருந்து பறித்துச் சென்ற வாக்கி டாக்கி குறித்து விசாரித்துள்ளனர். அதனை தாம் தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் அருகில் மறைத்து வைத்திருப்பதாக ரவுடி ஆனந்தன் கூற, அதனை எடுத்துத் தருமாறு கேட்டுள்ளனர்.

தொடர்ந்து ஆனந்தனை அப்பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். ஆனால், ரவுடி ஆனந்தன், அங்கிருந்த புதரில் வாக்கி டாக்கியோடு மறைத்து வைத்திருந்த கத்தியால் உதவி ஆய்வாளர் இளையராஜாவைத் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றான். இந்தத் தாக்குதலில் உதவி ஆய்வாளருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரவுடி ஆனந்தனை எச்சரிக்கும் விதத்தில் கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன், துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ரவுடி ஆனந்தன் படுகாயமடைந்துள்ளான். உடனே அவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரவுடி ஆனந்தன் உயிரிழந்தான்.

இந்நிலையில், போலீசார் நடத்திய என்கவுன்டர் தொடர்பாக கூடுதல் ஆணையர் சாரங்கன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். அதன் பின்னர், இந்தச் சம்பவம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

இந்நிலையில், ரவுடி ஆனந்தனால் தாக்கப்பட்டு, காயமடைந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளர் இளையராஜாவை கூடுதல் ஆணையர் ஜெயராம் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து, இந்த ரவுடி கும்பல் குறித்து ஏற்கெனவே தகவல் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல், மெத்தனமாக செயல்பட்டதாக ராயப்பேட்டை காவல் அதிகாரி மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.