இருசக்கர வாகனத்தில் இருவருமே ஹெல்மெட் அணிவது கட்டாயம்தான்!

சென்னை: இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக இன்று ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது சட்டம். இதைக் கடைபிடிக்காதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இந்நிலையில் பயண பாதுகாப்பு குறித்து இன்று சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும். அதன்படி இனி பின் இருக்கையில் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.

அதுபோல், கார்களில் செல்லும் நான்கு பேரும் கட்டாயம் சீட் பெல்ட் போட்டுக் கொள்ள வேண்டும். வாகனங்களில் முகப்பு விளக்கின் நடுவில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருக்க வேண்டும்.

உயரதிகாரிகள், காவலர்களும் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க சென்னை டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை சரியாக நடைமுறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி வரும் 27ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்.

முன்னதாக, பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் பெண்கள், அது தங்களுக்கு மிகவும் இடைஞ்சலாக இருப்பதாகவும், எனவே பின் இருக்கையில் அமர்ந்து செல்பவருக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். அதுபோல், மத ரீதியாக தலைப்பாகை, தொப்பி அணிந்து கொண்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் பேரிலும் போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுத்ததில்லை. இனி உயர் நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டு உத்தரவுகளை போலீஸார் அவசியம் கடைப்பிடித்தே ஆகவேண்டும்.