பாஜக.,வின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமித் ஷா வருகை இருக்கும் என்று பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.
பாஜக., தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ”சென்னையில் நடைபெறவுள்ள பாஜக., நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். அமித்ஷா வருகை தமிழகத்தில் ஒரு திருப்பு முனையாக அமையும். தமிழகத்தில் பாஜக., நிர்வாக ரீதியாக பலமாக உள்ளது. இது அமைப்பு ரீதியான கூட்டம் என்பதால் இது குறித்து கருத்துப் பரிமாற்றம் இருக்கும்” என்று கூறினார்.
அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள தமிழிசை, முன்னதாக சென்னை விஜிபி கோல்டன் பீச் ரெசார்டுக்கு அருகே மாநாட்டுக்கான பந்தல் போடும் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கும் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார்.