குற்றாலம் வரீங்களா? கொஞ்சம் யோசிச்சிட்டு வாங்க!

கடந்த மே மாத இறுதியில் துவங்கிய மழை ஜூன் மூன்றாவது வாரம் வரையில் ஓரளவு இருந்ததால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.

ஆனால், குற்றாலத்தில் கடந்த 15 நாட்களாக மழை ஓய்ந்து மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து வருகின்றனர்.

வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் குற்றாலத்தில் கூட்டம் வெகுவாக அதிகரித்தே இருக்கும். கடந்த வாரம் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தண்ணீர் வரத்து ஓரளவு இருந்தபோதும், மதுரை, தென்காசி சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குற்றாலத்திலும், குறுகிய சாலைகள் என்பதால், வாகனங்களில் நகர்ந்து செல்லவே பயணிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். இந்த வாரம் மேலும் தண்ணீர் குறைந்தும், வெள்ளிக்கிழமை இன்று கூட்டம் அதிகரித்தும் காணப் படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மிகக் குறைந்த நேரமே அருவியில் தலை காட்டி நகர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே… சனி, ஞாயிறு இருநாட்களும் குற்றாலம் வருபவர்கள் கொஞ்சம் யோசித்து… வரலாம்…!