நவீன பெட்டிகள் கொண்ட திருநெல்வேலி– காந்திதாம் ரயில் பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியால் நாகர்கோவில் டவுனில் நிறுத்தம்

நாகர்கோவில்: திருநெல்வேலியிருந்து திருவனந்தபுரம் வழியாக காந்திதாம்க்கு வாராந்திர ஹம்சாபர் ரயில் துவங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சனிக் கிழமை நாகர்கோவில் டவன் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. அடுத்த வாரம் முதல் இந்த வழித்தடத்தில் நிரந்தர ரயில் இயக்கப்பட இருக்கிறது. இதன்படி இந்த ரயில் ஒவ்வொரு வியாழக் கிழமையும் திருநெல்வேலியிருந்து காலை 7:45க்கு புறப்பட்டு புறப்பட்டு நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், எர்ணாகுளம், ஷொர்ணூர், கோழிக்கோடு, மங்களுர், கோவா, பன்வல், சூரத், அகமதாபாத் வழியாக காந்திதாமுக்கு சனிக்கிழமை காலை 4:40க்கு காந்திதாம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் காந்திதாமிலிருந்து திங்கள்கிழமை மதியம் 1:50க்கு புறப்பட்டு புதன்கிழமை 11:3க்கு திருநெல்வேலி வந்தடையும். இந்த ரயிலில் பெட்டிகளும் மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் அடங்கியது. இந்த ரயில்தான் குமரி மாவட்ட பயணிகள் பயன்படுத்தும் விதத்தில் இயக்கப்பட்ட முதல் எல்.எச்.பி., பெட்டிகள் கொண்ட ரயில்.

திருநெல்வேலி – காந்திதாம் ஹம்சாபர் புதிய ரயில் பயணிக்கும் மொத்த தொலைவு 2455 கி.மீ., பயண நேரம் 47 மணி 10 நிமிடம். மணிக்கு 52 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயில் 14 நிறுத்தங்களில் நின்று செல்கிறது.

திருநெல்வேலி – காந்திதாம் ஹம்சாபர் ரயில் கடந்த வருடம் வெளியிட்ட ரயில் கால அட்டவணையில் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ரயில் இயக்கும் போது இந்த ரயில் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தில் நிற்காது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் குமரி மாவட்ட ரயில் பயணிகள் மிகுந்த அதிர்சி அடைந்தனர். பின்னர் நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் இந்த ரயில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அவரது உடனடி முயற்சியால், இந்த ரயில் நாகர்கோவில் டவுன் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. காந்திதாமிலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் தலைமையில் நாகர்கோவில் டவுண் ரயில் பயணிகள் சங்க தலைவர் மோகன் மற்றும் பலர் சிறப்பித்து ரயிலை வரவேற்று முதலில் வந்திறங்கிய பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.