தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று பொதுத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பாக நடைபெற்ற கேள்வி நேரத்தில் தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்றால் 2,500 சதுர கிலோ மீட்டர் இருக்க வேண்டும், மேலும் வருவாய் கிராமங்கள் 200 இருக்க வேண்டும், ஆனால் 2,200 சதுர கிலோமீட்டர் மட்டுமே தென்காசியில் உள்ளது. வருவாய் கிராமங்கள் 195 மட்டுமே உள்ளது. புதிய மாவட்டம் உருவாக்க வேண்டிய தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன.
ஆனாலும் தமிழக முதல்வர் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு திண்டுக்கல் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்கள் தனியாக உருவாக்கப்பட்டன. கடந்த 2004ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் கூட புதிதாக உருவாக்கப்பட்டது.
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தேவை இருப்பின் தென்காசியை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவதற்கும் அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.