தினசரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறீர்கள்; நீதிமன்றத்தை அணுக முடியாதா?: பாரதிராஜாவுக்கு ‘பொளேர்’ கேள்வி!

தினமும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதிராஜா, நீதிமன்றத்தை அணுக முடியாதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தினமும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதிராஜா, நீதிமன்றத்தை அணுக முடியாதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த மாதம் புதிய தலைமுறை டிவி தொடர்பான பிரச்னையில் சிக்கினார் இயக்குநர் அமீர். அவருக்கு ஆதரவாகப் பேசிய பாரதிராஜா, அரசை மிரட்டும் வகையிலும், தேச விரோதமாகவும் பல கருத்துகளைக் கூறினார். இதை அடுத்து அவருக்கு எதிராக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது காவலர்களை தாக்கத் தூண்டியதாகக் கூறி, அவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளில் தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் பாரதிராஜா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தினமும் காலை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் பாரதிராஜாவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அதை அவர் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே வேறொரு வழக்கில் முன்ஜாமீன் கோரி இயக்குநர் பாரதிராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தினமும் நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து கொள்ளும் பாரதிராஜா ஏன் கீழ் நீதிமன்றத்தை அணுகவில்லை? என கேள்வி எழுப்பினர்.