சென்னை: திமுக., என்றால் விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் கட்சி என்றும், மு.கருணாநிதி விஞ்ஞான ஊழல்வாதி என்றும் பலரும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில், மாநில அமைச்சர் ஒருவர் அதனைக் கண்டறிந்து கூறியுள்ளது பலரையும் ஆச்சரியப் பட வைத்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர், திமுக ஆட்சி காலத்தில் விஞ்ஞான முறையில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், திமுக., ஆட்சி காலத்தில் டெண்டர் விடுவதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டு குற்றச்சாட்டு
தெரிவித்தார்.
மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கும் செயலுக்கு அதிமுக என்றும் உடன்படாது என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், அணைப் பாதுகாப்பு மசோதா, யுஜிசி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்
என்றும்,
தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் ஒத்துழைக்க மாட்டோம்
என்றும் உறுதிபடக் கூறினார்.
முன்னதாக இன்று அதிமுக., எம்பிக்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம், ஓபிஎஸ்., இபிஎஸ். ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மசோதாக்களை எதிர்க்குமாறு முடிவு எடுக்கப் பட்டது.