October 17, 2021, 8:20 pm
More

  ARTICLE - SECTIONS

  ஆர்வக்கோளாறுக்கு அளவில்லையா? யுடியூப் மூலம் வீட்டில் பிரசவம் பார்த்து உயிரைப் பறிகொடுத்த ஆசிரியை!

  krithika dead house delivery - 1

  திருப்பூர்: நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வாழ்க்கையை இழந்து வருபவர்கள் பலர். அப்படிப்பட்ட ஆர்வக் கோளாறுகளுக்கு உதாரணமாக ஓர் ஆசிரியை தன் உயிரையே இழந்திருக்கிறார்.

  இயற்கை முறை மருத்துவம் என யுடியூப் youtube மூலம் வீடியோவைப் பார்த்து பிரசவத்தை மேற்கொண்ட கிருத்திகா என்ற ஆசிரியை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசித்துவருகிறார் கார்த்திகேயன். இவர் பனியன் நிறுவனத்தில் உயர் பதவியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நல்ல வசதியான வாழ்க்கை மேற்கொண்ட இவர்களுக்கு ஹிமானி என்ற 5 வயது பெண் குழந்தை உள்ளது.

  இந்தத் தம்பதிக்கு இயற்கை மருத்துவத்தின் மீது அலாதியான ஆர்வம். இவர்களுக்கு ஆங்கில மருத்துவம் என்பது ஒரு பொருளாதாரம் மிகுந்த மற்றும் அதிக செலவை உருவாக்கக்கூடிய மருத்துவம் என்ற எண்ணம் இருந்து வந்தது.

  இந்நிலையில் கார்த்திகேயனின் நண்பர் பிரவீன் மற்றும் அவரது மனைவி லாவண்யா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது கிருத்திகாவுக்கு.  லாவண்யா தம்பதியின் மகள் இயல்மதி சுகப் பிரசவத்தில் வீட்டிலேயே பிறந்ததாகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் லாவண்யா தம்பதி தெரிவித்ததால், தனக்கும் சுகப்பிரசவம் வீட்டிலேயே நடக்க வேண்டும் என ஆசைப்பட்டார் கிருத்திகா.

  இந்த எண்ணத்தால், கார்த்திகேயன் கிருத்திகா தம்பதி இருவரும் பேசி வீட்டிலேயே சுகப் பிரசவம் மேற்கொள்வது என முடிவு செய்தனர். இதனையடுத்து இருவரும் யூ-டியூப் மூலமாக பல்வேறு சுகப் பிரசவம் குறித்த வீடியோக்களை பார்த்துள்ளனர். மேலும் இரண்டாவது குழந்தை உருவானதும் முதல் மாதம் முதலே மருத்துவமனை எதற்கும் செல்லாமல், எந்த விதமான மருத்துவ ஆலோசனைகளும் பெறாமல், ஆங்கில முறை மருத்துவத்தை தவிர்த்து வந்துள்ளனர்.

  ஆனால், இதுகுறித்து கிருத்திகாவின் தந்தை சுப்ரமணி பலமுறை வற்புறுத்தியும் எச்சரிக்கை செய்தும், கார்த்திகேயன் தம்பதி  கட்டாயமாக மறுத்துள்ளனர்.

  இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி கிருத்திகாவிற்கு வலி ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, லாவண்யாவை வீட்டுக்கு அழைத்துள்ளார் கிருத்திகா. லாவண்யா பிரவின் தம்பதி  மற்றும் கார்த்திகேயன் கார்த்திகேயன் தாயார் காந்திமதி ஆகியோர் கிருத்திகாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

  அப்போது கிருத்திகாவிற்க்கு பெண் குழந்தை நல்ல விதமாக பிறந்துள்ளது எனினும் நஞ்சுக் கொடியானது வெளியே வராததால் கிருத்திகா மயக்கமடைந்துள்ளார் இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருத்திகாவை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கிருத்திகா உயிரிழந்தார்.

  இதன் பின்னர் கிருத்திகாவின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் மின் மயானத்தில் எரிப்பதற்காகக் கொண்டு சென்ற போது, மருத்துவரின் கடிதம் இல்லாத காரணத்தால் மின் மயானத்தில் எடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில், கிருத்திகாவின் தந்தை சுப்ரமணி நல்லூர் ஊரகக் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் என்றும் இந்த விவகாரத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறும்  குறிப்பிட்டிருந்தார்.  இதனை அடுத்து கிருத்திகாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

  கிருத்திகாவின் தந்தை சுப்பிரமணி அளித்த புகாரின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இயற்கை வைத்தியம் என்பது முறையான பயிற்சிகள் மேற்கொண்டு அனுபவம் வாய்ந்த மருத்துவர்களால் மட்டுமே சாத்தியப் படக்கூடிய ஒன்று. ஆங்கில மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவம் என எந்தத் துறையானாலும் முறையான பயிற்சிகள் செய்யாமல் மேற்கொள்ளக்கூடிய எந்த ஒரு செயலும் விபரீதத்தை ஏற்படுத்தும்.

  குறிப்பாக, இணையதளங்களைப் பார்த்து தங்களுக்குத் தாங்களே மருத்துவம் பார்த்துக் கொள்வதும்,  யூ டியூப் மூலம் வீடியோக்களை பார்த்து அதன் மூலம் பிரசவம் போன்ற ஆபத்து மிகுந்த சிகிச்சைகளை மேற்கொள்வதும் உயிரிழப்பில் முடியும் என்பதற்கு ஓர் ஆசிரியையான கிருத்திகாவே தன்னை உதாரணம் ஆக்கிச் சென்றுள்ளார்.

  சுகாதாரமான பிரசவம், பிரசவகால இறப்புகள் குறைவு என மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இதற்காக அதிகம் செலவிட்டு வரும் நிலையில், இது போன்ற நடவடிக்கைகளை படித்த மக்களே மேற்கொள்வது வருந்தத் தக்கதே!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,561FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-