சென்னை: தலைவர்கள் வருவதை வைத்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கவலைப்பட வேண்டாம் என திமுக.,வின் நகைச்சுவப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கூறினார்.
திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலம் குன்றி, அவசர சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு தினங்களாக அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல் நிலை குறித்து வதந்திகள் பரவின. இதனால் அவரது தொண்டர்கள் பெரிதும் கலவரமடைந்தனர். ஆயினும் அவரது உடல் நிலை நன்கு உள்ளது என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இருப்பினும் கருணாநிதியைப் பார்ப்பதற்காக, வரிசையாக அரசியல் கட்சித் தலைவர்களும் வரத் தொடங்கினர். மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், தேசிய தலைவர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் தொண்டர்கள் இடையே மேலும் பதற்றம் அதிகரித்தது. கருணாநிதி குறித்த வதந்திகள் உண்மையோ என்று எண்ணும் அளவுக்கு அவர்களிடையே பதற்றம் அதிகரித்தது. இந் நிலையில் சனிக்கிழமை காவேரி மருத்துவமனைக்குச் சென்ற அக்கட்சியின் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவரது குடும்பத்தாரிடம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தலைவர்கள் வருவதை வைத்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கவலை கொள்ள வேண்டாம்… என்று தொண்டர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு பதிலளித்தார்.