திருச்சி: வெளிநாட்டில் இருந்து கொண்டு தமிழக போலீசாரை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டவர் நாடு கடத்தப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் திருச்சி திருவெறும்பூரில் நிகழ்ந்த ஒரு விபத்தைக் குறித்து தகவல் வெளியிட்டு, அதில் தமிழக போலீஸாரை தரக்குறைவாக விமர்சனம் செய்த நபர் இப்போது வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு திருப்பி அனுப்பப் பட்டு கைது செய்யப் பட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் தவறாக விமர்சிப்பவர்களுக்கு இது ஓர் எச்சரிக்கை மணியாகவே பார்க்கப் படுகிறது.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த சூலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், தன் மனைவி உஷாவுடன் கடந்த மார்ச் 7ஆம் தேதி மாலை தன் பைக்கில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திருவெறும்பூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், ராஜாவின் வாகனத்தை மறித்தார்.
ஆனால் நிற்காமல் சென்ற ராஜாவின் பைக்கை தூரத்திச் சென்ற காவல் ஆய்வாளர் காமராஜ் பைக்கை எட்டி உதைத்ததாகவும், இதில் நிலை தடுமாறி உஷா, ராஜா இருவரும் கீழே விழுந்ததாகவும், அப்போது தலையில் பலத்த காயமடைந்த உஷா சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
தமிழகத்தை உலுக்கிய இந்த கோர சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்டது. அதில் வேறு சில உண்மை நிலவரம் தெரியவந்தாலும், சம்பவம் நடந்த நேரத்தில், காவல் துறையினர் மீது பொதுமக்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டிருந்தது. காவல் ஆய்வாளர் காமராஜ் அத்துமீறிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என கடுமையாக மக்கள் எதிர்த்தனர். அந்த நேரத்தில் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் இந்த விவகாரம் பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளானது. அப்போது, தமிழக காவல்துறையினருக்கு எதிராக தகாத வார்த்தைகளில் பேசி விமர்சனம் செய்து சங்கரலிங்கம் என்பவரும் இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதை அடுத்து சங்கரலிங்கம் மீது கடந்த 21.03.2018 அன்று திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்ய திட்டமிட்ட போலீஸார், அவரது ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகளை வைத்து அவரின் முகவரியைக் கண்டறிந்தனர்.
அதில் அவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலை அடுத்த நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் குவைத்தில் பணி செய்து வருவதும் தெரிய வந்தது. இதை யடுத்து குவைத்தில் இருந்து சங்கரலிங்கத்தை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர்.
அதன்படி திருவெறும்பூர் காவல்நிலையத்தில் இருந்து மத்திய உள்துறை செயலகத்திற்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் குவைத்தில் பணி செய்து வரும் சங்கரலிங்கத்தை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இந்திய உள்துறைச் செயலகம், வெளியுறவு அமைச்சகம் மூலம், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் இந்த வேண்டுகோளை வைத்தது. அதன்படி, இந்திய தூதரகம் மூலமாக, குவைத் அரசின் நெருக்கடியில், அவர் பணி புரிந்து வந்த நிறுவனத்தில் இருந்து பணி நீக்கப்பட்டு, அவர் இந்தியா திருப்பி அனுப்பப் பட்டார்.
இதை அடுத்து இந்தியா திரும்பிய சங்கரலிங்கத்தை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து, திருச்சி போலீசார் ஜூலை30ம் தேதி கைது செய்தனர்.
தமிழக போலீசாரை உண்மை நிலவரம் தெரியாமல் தரக்குறைவாக விமர்சித்த காரணத்திற்காக நாடு கடத்தப்பட்டு இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது சமூக வலைத்தள வாசிகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், நாட்டின் பிரதமர் மோடியை கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்களும், நாட்டின் நீதிபதியை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சிப்பவர்களும் வெளியில் அதுவும் நம் நாட்டிலேயே இருந்து கொண்டு தைரியமாக உலவிக் கொண்டிருக்கையில், போலீஸாரை விமர்சித்ததற்காக போலீஸார் விரைந்து இவ்வளவு பெரிய நடவடிக்கை மேற்கொண்டது ஆச்சரியம்தான்!