டிடிவி தினகரன் பணத்தை வாரி இறைக்கிறார் அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார் திவாகரன்.
தினகரன் உறவினரும் அண்ணா திராவிடர் கழக தலைவருமான திவாகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் டிடிவி தினகரன் பணத்தை வாரி இறைக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் கூறிய போது, விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா மரணம் குறித்து என்னிடம் கேள்வி கேட்கவில்லை. நான் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று கூறினார்.
தினகரன் குறித்த கேள்விக்கு பதிலளித்த போது, டிடிவி தினகரன் பணத்தை வாரி இறைக்கிறார். அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது…? மன்னார்குடி கூட்டத்துக்கும் டோக்கன் கொடுத்து குக்கர் தருவதாகச் சொல்லி கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அதை எப்படி கொடுப்பார்?
சிலைக் கடத்தல் வழக்கு உள்பட அரசின் செயல் ஒவ்வொன்றும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பொன். மாணிக்கவேல் ஒரு நேர்மையான அதிகாரி. அப்படி இருக்கும் போது, சிலைக் கடத்தல் வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றுகிறார்கள் என்பது தெரியவில்லை.
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் அரசுக்கு விருப்பமில்லை என்பதாலேயே தள்ளிப் போடுகிறது.
சென்னைப் பல்கலைக் கழகம் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலுமே முறைகேடுகள் நடக்கின்றன என்று கூறினார் திவாகரன்.