சென்னை: பெரும் எதிர்பார்ப்பில் காவேரி மருத்துவமனை முன்னர் காத்திருக் கின்றனர் திமுக தொண்டர்கள்.
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை அளித்தது. மேலும் 24 மணி நேரத்துக்குப் பிறகே அடுத்து எதுவும் கூற முடியும் என்று தெரிவித்ததால், அடுத்த அறிக்கையினை மருத்துவமனை எப்போது வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் மேலோங்கி வருகிறது.
இதனிடையே சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின் இன்று காலை மீண்டும் வந்தார். தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாள், ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். தொடர்ந்து அந்தப் பகுதி பரபரப்புடனே இருக்கிறது.
இன்று முற்பகல் 11 மணி அளவிலும் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியானது.
இதனிடையே, திமுக தலைவர் கருணாநிதியின் மனதைரியத்தால் விரைவில் பூரண குணமடைந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும், மு.க.ஸ்டாலின், கனிமொழி, அழகிரியிடம் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன் என்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறினார்.