சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
துணை ஆட்சியர், தாசில்தார், மாவட்ட வருவாய் அலுவலர், நில அளவீட்டுத் துறை கூடுதல் ஆணையர் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே, சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி இல்லம் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.
மேலும், டாஸ்மாக் அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், அனைத்து சில்லறை விற்பனைக் கடைகளும் அதனுடன் இணைந்த மதுக் கூடங்களும் இன்று மாலை 6.00 மணிக்கு பூட்டப்பட வேண்டும் என்று மாவட்ட மேலாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கோபாலபுரத்தில் போலீசார் தடுப்புகளை அமைத்து வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் வெளியிலிருந்து யாரும் காவேரி மருத்துவமனைக்குள் வர இனி அனுமதியில்லை என காவல்துறை அறிவித்துள்ளது,
மேலும், காவேரி மருத்துவமனையின் முன்பு காத்திருப்பவர்கள், மருத்துவமனை வளாகத்திற்குள் வர அனுமதி இல்லை என காவல்துறை ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.
சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெளியூர்களில் இருந்து சென்னைக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் பல ஊர்களில் ரத்து செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளையும் உடனடியாக சென்னைக்கு வர டிஜிபி உத்தரவு இட்டுள்ளார்.